
24.03.2025 – விசாகபட்டினம்
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், டில்லி, லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். மார்க்ரம் (15), கேப்டன் பந்த் (0) ஏமாற்றிய போதும், மிட்சல் மார்ஷ் (72), பூரன் (75) அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். இவர்களுக்கு பின் வந்த மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய போதும், டேவிட் மில்லர், கடைசி கட்டத்தில் அதிரடியாக சிக்சர்கள் விளாசி, அணி 200 ரன்களை கடக்க உதவினார்.
20 ஓவரில், லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27, திக்வேஷ் 0, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டில்லி அணி சார்பில், ஸ்டார்க் 3, குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை நோக்கி விளையாடிய டில்லி அணிக்கு, மெக்கர்க்(1), அபிஷேக் படேல் (0), ரிஸ்வி (4) ஏமாற்றினர். டு பிளஸி (29), அக்ஷர் படேல் (22), ஸ்டப்ஸ் (34) சற்று நம்பிக்கை அளித்தனர். கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த அஷூதோஷ் சர்மாவும், விப்ராஜ் நிகாமும் (39) அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர்.
இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட் விழ, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி விக்கெட்டை வீழ்த்தினால் லக்னோ அணி வெற்றி பெறும் என்ற சூழலில், அஷூதோஷ் சர்மா சிக்ஸர் விளாசி, டில்லி அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார்.
லக்னோ தரப்பில், ஷர்துல் தாக்கூர், சித்தார்த், திக்வேஷ், பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 66 ரன்கள் விளாசிய அஷூதோஷ் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பகிரவும்: