27.03.2025 – மாஸ்கோ
கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அதிபர் புடின் ஏற்றுக்கொண்டார். அதன்படி அவரது இந்திய சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா இன்று அறிவித்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: புடினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தார். இப்போது எங்கள் தரப்பில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் அவர் அதிபர் புடின் இந்தியாவுக்கும் வரும் தேதியை குறிப்பிடவில்லை. இது போரின் சகாப்தம் அல்ல என்று பிரதமர் மோடி பலமுறை புடினிடம் கூறியிருந்தாலும், உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.