27.03.2025 – புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை கூட்டம், கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, எதிர்க்கட்சி தலைவர் சிவா.
அதிகார விடுதலை
தலைமையில் தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், காங்., – எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு ஆகியோர் தனிநபர் தீர்மானங்கள் கொண்டு வந்து பேசினர்.
அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டசபையில் 15 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், நமக்கு இதுவரை அதிகார விடுதலை கிடைக்கவில்லை.
மாநிலத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு தனிக்கணக்கு தொடங்கியது முதல், மத்திய அரசு பங்களிப்பு குறைந்து வருகிறது. 2017ல், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்தபின் சொந்த வருவாயில் மாநிலம் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை இந்த சட்டசபை வலியுறுத்துவதாக தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், நிதி கமிஷனில் சேர்ப்பது எல்லாம் மாநில அந்தஸ்து வந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை வலியுறுத்தி, தீர்மானத்தின் மீது பேச எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தீர்மானத்தை ஆதரித்து எம்.எல்,ஏ.,க்கள், தங்கள் கருத்துகளை தெரிவித்து, மாநில அந்தஸ்து பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர்.
அரசின் எண்ணம்
இறுதியாக முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ”மாநில அந்தஸ்து பெறுவதுதான் அரசின் எண்ணம். அதுதான் மக்களின் எண்ணமும்கூட. மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை பெற அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்துவோம்,” என்றார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள் கொண்டு வந்த, மாநில அந்தஸ்திற்கான தனிநபர் தீர்மானங்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்ட சபையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, 15 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 16வது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.