27.03.2025 – புதுடில்லி
மருந்து நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட விலை உயர்வை மீறி மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுவதை, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு கண்டறிந்தது.
கடந்த 6ம் தேதி நிலவரப்படி, 307 மருந்துகளின் விலை உயர்வில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஆவணப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புற்று நோய், நீரிழிவு நோய், இதயக் கோளாறு, ஆன்டிபயாட்டிக் போன்ற விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் விலை, 1.7 சதவீதம் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கான அகில இந்திய அமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் சிங்கல் கூறியதாவது:
மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் இதர செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு, மருந்து விற்பனை தொழிலுக்கு நிம்மதி அளித்து உள்ளது.
சந்தையில், 90 நாட்களுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு இருக்கும் என்பதால், இந்த விலை உயர்வு அமலுக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களாகும். – இவ்வாறு அவர் கூறினார்.