28.03.2025 – பாங்காக்
மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10 மீ ஆழத்தில் முதலில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து 6.4 ஆகவும், பிறகு 4.8 ஆகவும் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மரில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, மணிப்பூர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
40 பேர் மாயம்
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான வீடியோக்களை அந்நாட்டினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பூகம்பம் காரணமாக தாய்லாந்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் 43 பேர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் இதில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல், பாங்காக் நகரில் வானுயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து நிலநடுக்கம் காரணமாக தண்ணீர் மேல் இருந்து கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.
மியான்மர்
மியான்மரின் மண்டலே நகரில் உள்ள பல கட்டடங்கள் சேதமடந்துள்ளன. இரண்டு மாடி கட்டடம் ஒன்று சரிந்து பக்கத்து வீட்டின்மேல் விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. பழைய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்து உள்ளது. அதேபோல் தலைநகர் நயிபிடாவ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால், அங்கிருந்த பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
நயிபிடாவ் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பூகம்பத்தால் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. இதனால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. அம்மருத்துவமனையில் இருந்த மக்கள், தெருக்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மியான்மர் தாய்லாந்து எல்லையில் உள்ள புத்தமத வழிபாட்டு தலங்கள் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளன.இரு நாடுகளிலும் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை மியான்மரில் 100 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இருநாடுகளிலும் சேதம் அதிகமாக காணப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.