28.03.2025 – உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுக்கடையில் மது குடித்தபோது கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை கூறிய போலீஸ் ஏட்டு முத்துக்குமாரை 40, கல்லால் தாக்கி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும், நிவாரண உதவி கேட்டும் உறவினர்கள், அரசியல் கட்சியினர் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தில் தீர்வு கிடைக்காததால் இன்று(மார்ச் 29) மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் எனக்கூறி உடலை வாங்க மறுத்தனர்.
உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த ஏட்டு முத்துக்குமார். 2009ல் பணியில் சேர்ந்தவர். உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் டிரைவராக இருந்தவர், நேற்றுமுன்தினம் நண்பர் ராஜாராமுடன் 31, முத்தையம்பட்டி மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றார். அங்கு தேனி மாவட்ட கஞ்சா வியாபாரி நாவார்பட்டி பொன்வண்ணன் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
பொன்வண்ணன் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் அவருக்கு முத்துக்குமார் அறிவுரை கூறினார். இதுதொடர்பாக அவருக்கும், பொன்வண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் முத்துக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு அலைபேசியில் முத்துக்குமார் தெரிவித்தார். போலீசார் வருவதை அறிந்து தகராறு செய்தவர்கள் டூவீலர், அலைபேசி உள்ளிட்டவற்றை விட்டு விட்டு தப்பினர். முத்துக்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் கூறிவிட்டு சென்றனர்.
பின்னர் முத்துக்குமாரும், ராஜாராமும் அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவரையும் ஆயுதங்களால் தாக்கியது. கீழே விழுந்த முத்துக்குமார் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்தது. ராஜாராம் படுகாயமடைந்தார். இதில் ஈடுபட்டதாக பொன்வண்ணன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், பாரதிய பா.பி, தலைவர் முருகன்ஜி, பா.ஜ., நிர்வாகி வீரபிரபாகரன் இ.கம்யூ., கட்சியினர் 3 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.,க்கள் அரவிந்த்(மதுரை), ஆஷிஷ் ராவத்(சிவகங்கை) டி.எஸ்.பி., சந்திரசேகரன், ஆர்.டி.ஓ. சண்முகவடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை ஒத்திவைத்த உறவினர்கள், கட்சியினர், ‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று காலை மீண்டும் போராட்டத்தை தொடர்வோம்’ என அறிவித்தனர்.
கடமலைக்குண்டு: இக்கொலையில் தொடர்புடையவர்கள் தேனி மாவட்டத்தினர் என்பதால் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மல்லபுரம் — மயிலாடும்பாறை மலைச்சாலை சோதனை சாவடியில் சோதனையை தீவிரப்படுத்தினர். வருஷநாடு மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கியிருக்கலாம் என அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.