02.04.2025 – உச்சிப்புளி
உச்சிப்புளி கடற்கரையில் இருந்து கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் முகாம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வந்த தகவலையடுத்து அங்கு ேஹாவர் கிராப்ட் ரோந்து கப்பலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உச்சிப்புளி தெற்கு கடற்கரையில் ஐந்து கேன்களில் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனை கைப்பற்றிய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமிற்கு எடுத்து வந்து பதுக்கியவர்கள் குறித்து விசாரித்தனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.80 லட்சம் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கடல் அட்டைகள் கடல் பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகளை செய்கிறது. இதனால் கடல் அட்டை தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றாகும்.
இதில் உள்ள காண்டிரைட்டின் சல்பேட் கீழ் வாத நோயை குணப்படுத்தும் மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே கடல் அட்டை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இதனை பிடிக்க அனுமதி உண்டு.