
06.04.2025 – சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின.
கேப்டன் ருதுராஜ்: முழங்கை காயத்தில் இருந்து மீண்ட ருதுராஜ், சென்னை அணி கேப்டனாக தொடர்ந்தார். தோனி தலைமை தாங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஓவர்டன், திரிபாதி நீக்கப்பட்டு கான்வே, முகேஷ் சவுத்ரி வாய்ப்பு பெற்றனர். டில்லி அணியில் உடல்நிலை சரியில்லாத டுபிளசிக்கு பதில் சமீர் ரிஸ்வி இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் அக்சர் படேல், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ராகுல் அரைசதம்: டில்லி அணிக்கு மெக்குர்க் (0) ஏமாற்றினார். முகேஷ் சவுத்ரி ஓவரில் அபிஷேக் போரல் (4,6,4,4) வெளுத்து வாங்க, 19 ரன் எடுக்கப்பட்டன. முதல் 6 ஓவரில் (பவர் பிளே) டில்லி அணி 51/1 ரன் எடுத்தது. ரவிந்திர ஜடேஜா வலையில் போரல் (33) சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல், சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி ஜடேஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அக்சர், 21 ரன் எடுத்தார். பின் ராகுல், ரிஸ்வி அசத்தினர். நான்காவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். 33 பந்தில், பிரிமியர் அரங்கில் 38வது அரைசதம் எட்டினார் ராகுல். மறுபக்கம் நுார் பந்தில் சிக்சர் அடித்த ரிஸ்வி, 20 ரன்னுக்கு வெளியேறினார்.
கடைசி வரை துாணாக நின்று ஆடிய ராகுல் ஆட்டம், டில்லி ரசிகர்களுக்கு ‘ரசகுல்லா’ போல இனித்தது. பதிரனா பந்தில் ராகுல் (77, 6×4, 3×6) வெளியேறினார். அஷுதோஷ் (1) ரன் அவுட்டானார். கடைசி 5 ஓவரில் 43 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன. டில்லி அணி 20 ஓவரில் 183/6 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (24), விப்ராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்
‘டாப்-ஆர்டர்’ ஏமாற்றம்: கடந்த 5 ஆண்டுகளான 180 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை எட்ட முடியாமல் தடுமாறும் சென்னை அணியின் பேட்டிங் நேற்றும் சறுக்கியது. முகேஷ் குமார் ‘வேகத்தில்’ ரச்சின் (3) நடையை கட்டினார். ஸ்டார்க் பந்தில் கேப்டன் ருதுராஜ் (5) அவுட்டானார். விப்ராஜ் சுழலில் கான்வே (13) அவுட்டாக, 6 ஓவரில் 46/3 ரன் எடுத்து தத்தளித்தது. ஷிவம் துபே (18) சோபிக்கவில்லை. குல்தீப் வலையில் ஜடேஜா சிக்க (2), 11 ஓவரில் 76/5 என தவித்தது.
விஜய் சங்கர் ஆறுதல்: வெற்றிக்கு 54 பந்தில் 108 ரன் தேவை என்ற நிலையில் 7வது இடத்தில் வந்தார் தோனி. இன்னும் 9 ஓவர் மீதமிருந்ததால் இவரது அதிரடியை காண ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், 43 வயதான தோனியால் முன்பு போல விளாச முடியவில்லை. தனது 19வது பந்தில் தான் முகேஷ் குமார் பந்தில் சிக்சர் அடித்தார். மறுபக்கம் விஜய் சங்கர் மந்தமாக ஆட, ரசிகர்கள் நொந்து போயினர். தோனி-விஜய் 6வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்து ஆறுதல் தந்தனர். சென்னை அணி 20 ஓவரில் 158/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது. விஜய் சங்கர் (69, 5×4, 1×6), தோனி (30, 1×4, 1×6) அவுட்டாகாமல் இருந்தனர்.
15 ஆண்டுக்கு பின் – சென்னையின் சேப்பாக்கம் கோட்டை தகர்கிறது. பிரிமியர் அரங்கில் சேப்பாக்கம் மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று டில்லி அணி வெற்றி பெற்றது. கடைசியாக 2010ல் இங்கு வென்றிருந்தது. இதே போல 17 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை பெங்களூரு அணி சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது.
மீண்டும் ‘ஹாட்ரிக்’ – டில்லி அணி 2009ல் தொடர்ந்து முதல் 3 போட்டிகளில் வென்றது. இதற்கு பின் இம்முறை ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ளது.
இது பற்றி கேப்டன் அக்சர் படேல் கூறுகையில்,”தொடர்ந்து 3 போட்டிகளில் எளிதாக வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை. விரல் காயம் காரணமாக என்னால், நேற்று முழுமையாக 4 ஓவர் பந்துவீச முடியவில்லை,”என்றார்.
மந்தமான அரைசதம் – சென்னை அணியின் விஜய் சங்கருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. ரன் எதுவும் எடுக்காத நிலையில், ஸ்டார்க் பந்தில் (2.5 ஓவர்) ‘ரிவியு’ கேட்காததால், எல்.பி.டபிள்யு.,வில் இருந்து தப்பினார். 27 ரன் எடுத்திருந்த போது குல்தீப் பந்தில் (12.4) கொடுத்த ‘கேட்ச்சை’ ஸ்டப்ஸ் கோட்டைவிட்டார். முதல் 31 பந்தில் ஒரு பவுண்டரி அடித்த விஜய், பிரிமியர் தொடரில் (2025) மந்தமான அரைசதம் (43 பந்து) அடித்தார். அடுத்த இடத்தில் சக சென்னை வீரர் ரச்சின் (42 பந்து, எதிர், மும்பை, இடம்: சென்னை, 2025)) உள்ளார்.
பகிரவும்: