07.04.2025 – ஐதராபாத்
ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
சிராஜ் அசத்தல்: ஐதராபாத் அணிக்கு முகமது சிராஜ் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ டிராவிஸ் ஹெட் (8), அபிஷேக் சர்மா (18) வெளியேறினர். இஷான் கிஷான் (17) நிலைக்கவில்லை. ஐதராபாத் அணி 50 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன் ஜோடி ஓரளவு கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது சாய் கிஷோர் ‘சுழலில்’ கிளாசன் (27) போல்டானார். தொடர்ந்து அசத்திய கிஷோர் பந்தில் நிதிஷ் குமார் (31) ஆட்டமிழந்தார்.
கம்மின்ஸ் ஆறுதல்: சிராஜ் பந்தில் அனிகேத் (18), சிம்ர்ஜீத் சிங் (0) ‘பெவிலியன்’ திரும்பினர். இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரில் கேப்டன் கம்மின்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது. கம்மின்ஸ் (22), ஷமி (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுப்மன் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் (5), பட்லர் (0) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் சுப்மன் கில், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் நம்பிக்கை அளித்தனர். ஷமி வீசிய 5வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார் கில். சிமர்ஜீத் சிங் வீசிய 6வது ஓவரில் வாஷிங்டன் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாச 20 ரன் கிடைத்தது. ஜீஷான் அன்சாரி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கில், 36 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது முகமது ஷமி ‘வேகத்தில்’ வாஷிங்டன் சுந்தர் (49 ரன், 2 சிக்சர், 5 பவுண்டரி) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
‘இம்பாக்ட்’ வீரராக வந்த ரூதர்போர்ட், அபிஷேக் சர்மா வீசிய 15வது ஓவரில், 4 பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரூதர்போர்ட், கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து கைகொடுத்தார். குஜராத் அணி 16.4 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கில் (61 ரன், 9 பவுண்டரி), ரூதர்போர்ட் (35) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரஷித் ஏமாற்றம் – மும்பை (0/10), பெங்களூரு (0/54), ஐதராபாத் (0/31) அணிகளுக்கு எதிராக ஏமாற்றிய குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், பிரிமியர் லீக் அரங்கில் 2வது முறையாக (2024, 2025), தொடர்ச்சியாக 3 போட்டியில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
‘100’ விக்டெ் – ஐதராபாத்தின் அபிஷேக் சர்மாவை அவுட்டாக்கிய குஜராத் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 97 போட்டியில், 102 விக்கெட் சாய்த்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 26வது வீரரானார்.
சிறந்த பந்துவீச்சு – ‘வேகத்தில்’ மிரட்டிய முகமது சிராஜ் (4/17, 4 ஓவர்), பிரிமியர் லீக் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் மொகாலியில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணிக்காக விளையாடிய இவர், 4/21 விக்கெட் கைப்பற்றினார்.