09.04.2025 – சென்னை
தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், கவர்னர் ரவிக்கு பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. தி.மு.க., அரசுக்கு முட்டுக்கட்டை போடவும், நெருக்கடிக்கு உள்ளாக்கவும், செயலிழக்க செய்யவும் முடியும் என, கவர்னர் நம்பினார். அவருக்கு தோதான மண் தமிழகம் இல்லை என, சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்.
நாகாலாந்தில் அவர் செய்ததைபோல், தமிழகத்தில் செய்ய முடியாது என்பதை, இப்போதாவது உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியதுபோல், ‘நீட்’ தொடர்பாகவும் பா.ஜ., ஆளாத மாநில அரசுகளை அழைத்து, அகில இந்திய அளவில் கூட்டம் நடத்தி, கல்வி தொடர்பான அதிகாரத்தை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். பா.ஜ., தயவு வேண்டும் என்பதற்காக, தமிழக மக்களின் ஆதரவை இழக்கும் நிலைப்பாடுகளை, அ.தி.மு.க., எடுத்து வருகிறது. இதனால், தமிழக மக்களிடம் இருந்து, அ.தி.மு.க., மெல்ல மெல்ல விலகி நிற்கிறது. அவர்களே அவர்களுக்கான சரிவை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
‘நீட்’ விலக்கு மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்புவதை கடந்து, ஆளும்கட்சியால் வேறு என்ன செய்ய முடியும் என்பதை அ.தி.மு.க., விளக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வரும் என, இலவு காத்த கிளிகள் போல் காத்திருந்தனர். அவ்வாறு நடக்காததால், விரக்தியில் பேசுகின்றனர். – இவ்வாறு அவர் கூறினார்.