10.04.2025 – புதுடில்லி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தங்களுடைய நிலத்தால் சூழப்பட்டுள்ளதாக, அண்டை நாடான வங்கதேச அரசு கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இனி இந்தியா வழியாக வங்கதேசம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். சீன ஆதரவாளரான இவர், சமீபத்தில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, வங்கதேசத்தில் முதலீடுகள் செய்வதற்கு அழைப்பு விடுத்தார். ‘இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள், எங்களுடைய நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளன. அவர்களால், வங்கக்கடலை அணுக முடியாது. அதனால், வங்கக்கடலின் பாதுகாவலனாக நாங்கள் உள்ளோம்’ என முகமது யூனுஸ் கூறினார்.
இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ‘இந்தியா, 6,500 கி.மீ., துார கடலோரத்தைக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது’ என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வங்கதேசம் தன் ஏற்றுமதிகளை, இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ள வழங்கப்பட்டிருந்த அனுமதியை, மத்திய அரசு நிறுத்திஉள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக, ஏற்றுமதியை செய்வதற்கு வங்கதேசத்துக்கு அனுமதி கொடுத்திருந்தோம். கடும் நெரிசல் மற்றும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு வங்கதேசத்துக்கு வழங்கியிருந்த அனுமதி நிறுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக நம் ஏற்றுமதியாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, வங்கதேச அரசு கூறிய கருத்துக்கு இதை பதிலடியாக பார்க்கக்கூடாது.
அதே நேரத்தில், மற்ற அண்டை நாடுகளான நேபாளம், பூடான், மியான்மருக்கான ஏற்றுமதிகளை மட்டும் இந்தியா வழியாக செய்ய வங்கதேசத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வந்துள்ள பொருட்கள் நிறுத்தப்படாது. புதிதாக இனி ஏற்க மாட்டோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.