
15.04.2025 -லக்னோ
லக்னோவில் உள்ள வாஜ்பாய் எகானா மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ சென்னை அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். லக்னோ அணியில் ஹிம்மத் சிங் நீக்கப்பட்டு, மிட்சல் மார்ஷ் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
பூரன் ‘அவுட்’
லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், மார்க்ரம் ஜோடி துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது முதல் ஓவரை வீசினார். இதன் 3வது பந்தில் பவுண்டரி அடித்தார் மார்க்ரம் (6). கடைசி பந்தில் சிக்சர்விளாச முயற்சிக்க, திரிபாதி ‘கேட்ச்’ செய்து வெளியேற்றினார். மிட்சல் மார்ஷுடன், இத்தொடரில்சிக்சர் மழை பொழியும் நிக்கோலஸ் பூரன் இணைந்தார்.
அன்ஷுல் கம்போஜ் வீசிய போட்டியின் 4வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்தார் மிட்சல் மார்ஷ். கடைசி பந்தில் பூரனுக்கு எல்.பி.டபிள்யு., அவுட் கேட்டு முறையிட்டார் கம்போஜ். அம்பயர் மறுக்கவே, ‘ரிவியூ’ செய்யப்பட்டது. ‘ரீப்ளேயில்’ பந்து ஸ்டம்சை தகர்ப்பது தெரியவர, அபாயகரமான பூரன், 8 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா நம்பிக்கை
மிட்சல் மார்ஷ், கேப்டன் ரிஷாப் பன்ட் ஜோடி சேர்ந்தனர். கலீல் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என அடித்தார் மிட்சல் மார்ஷ். ஓவர்டன் வீசிய பந்தை ரிஷாப் பன்ட், சிக்சருக்கு அனுப்பினார். ஜடேஜா வீசிய 8வது ஓவரில் மார்ஷ், ரிஷாப் தலா ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் வந்த ஜடேஜா, இம்முறை மிட்சல் மார்ஷை (30) போல்டாக்கி அசத்தினார். லக்னோ அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 78 ரன் எடுத்திருந்தது.
ஓவர்டன் வீசிய 12வது ஓவரின் கடைசி இரு பந்தில் சிக்சர் அடித்தார் ஆயுஷ். ஜடேஜாவின் 14வது ஓவரில் ஆயுஷிற்கு அவுட் தரப்பட்டது. ரீப்ளேயில் பந்து ‘கிளவ்சில்’ பட, தப்பினார் ஆயுஷ். இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. இதே ஓவரின் 4வது பந்தில், ஸ்டம்பிங் ஆகி திரும்பினார் ஆயுஷ் (22).
ரிஷாப் அரைசதம்
பதிரனா வீசிய போட்டியின் 18 வது ஓவரில், 2 சிக்சர் அடித்த ரிஷாப், இத்தொடரில் முதன் முறையாக அரைசதம் கடந்தார். தொடர்ந்து கலீல் ஓவரிலும் இரண்டு சிக்சர் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை பதிரனா வீசினார். இதில் அப்துல் சமத்தை (20), ரன் அவுட் செய்த தோனி, ரிஷாப்பை (63) ‘கேட்ச்’ செய்து அனுப்பினார். ஷர்துல் தாகூரும் (6) அவுட்டாக, லக்னோ அணி 20 ஓவரில் 166/7 ரன் எடுத்தது.
ஜடேஜா நம்பிக்கை
லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், மார்க்ரம்(6) ஜோடி துவக்கம் கொடுத்தது. பூரன் (8) ஏமாற்றினார். சுழலில் அசத்திய ஜடேஜா, மிட்சல்மார்ஷ் (30), ஆயுஷை (22) அவுட்டாக்கினார். இத்தொடரில் முதன் முறையாக அரைசதம் கடந்தார் ரிஷாப்.
பதிரனா வீசிய கடைசி ஓவரில் அப்துல் சமத்தை (20), ரன் அவுட் செய்த தோனி, ரிஷாப்பை (63) ‘கேட்ச்’ செய்து அனுப்பினார். ஷர்துல் தாகூரும் (6) அவுட்டாக, லக்னோ அணி 20 ஓவரில் 166/7 ரன் எடுத்தது.
நல்ல துவக்கம்
சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா, ஷேக் ரஷீத் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆகாஷ் தீப் ஓவரில் 3 பவுண்டரி அடித்த ரஷீத், ஷர்துல் ஓவரிலும் 2 பவுண்டரி விளாசினார். சென்னை அணி 4.4 ஓவரில் 52 ரன் எடுத்த நிலையில், அவேஷ் கான் ‘வேகத்தில்’ வீழ்ந்தார் ரஷீத் (27 ரன், 19 பந்து). ரச்சின் (37 ரன், 22 பந்து), மார்க்ரம் சுழலில் சிக்கினார்.
திடீர் சரிவு
அடுத்த சில நிமிடத்தில்திரிபாதி (9) கிளம்பினார். அடுத்தடுத்து விக்கெட் சரிய, அணியின் ரன்வேகம் குறைந்தது. 7 ஓவரில் 67/1 என இருந்த சென்னை, 11 ஓவரில்87/1 ரன் மட்டும் எடுத்தது.
பந்துகளை வீணடித்த ஜடேஜா (7 ரன், 11 பந்து), விஜய் சங்கர் (9 ரன், 8 பந்து) நிலைக்க வில்லை.
‘பினிஷர்’ தோனி
இதனால், கடைசி 30 பந்தில் சென்னை வெற்றிக்கு 56 ரன் தேவைப்பட்டன. அவேஷ் கான் ஓவரில் 2 பவுண்டரி அடித்த தோனி, 43 வயதிலும் ஷர்துல் பந்தில் சிக்சர் அடித்து பழைய ‘சிங்கமாக’ மிரட்டினார்.
18வது ஓவரில் 7 ரன் மட்டும் எடுக்கப்பட ‘டென்சன்’ எகிறியது. கடைசி 12 பந்தில் 24 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் பந்து வீசினார்.
முதல் இரு பந்தில் ஷிவம் துபே, 4, 6 (நோ பால்) என அடிக்க, 11 ரன் கிடைத்தன. கடைசி பந்தில் தோனி, தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 19 ரன் எடுக்கப்பட்டன.
கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்டன. அவேஷ் கான் பந்தை, துபே பவுண்டரிக்கு அனுப்ப, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
சென்னை அணி 19.3 ஓவரில் 168/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 28 பந்தில் 57 ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்த தோனி (26 ரன், 11 பந்து, ஸ்டிரைக் ரேட் 236.36), துபே (43) அவுட்டாகாமல் இருந்தனர். தவிர, ஒரு ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட் செய்த தோனி, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
தோனி ‘201’
பிரிமியர் அரங்கில் 200 விக்கெட் (‘கேட்ச்’, ‘ஸ்டம்பிங்’) வீழ்ச்சிக்கு காரணமான முதல் பீல்டர் ஆனார் தோனி (இதுவரை 201). தினேஷ் கார்த்திக் (182), டிவிலியர்ஸ் (126), உத்தப்பா (124), சஹா (118), கோலி (116) அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
வருகிறார் ஆயுஷ்
சென்னை அணி கேப்டன் ருதுராஜ். முழங்கை காயத்தால் பிரிமியர் தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் மும்பை வீரர், 17 வயது ஆயுஷ் மாத்ரே சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னை அணி தரப்பில் வெளியான செய்தியில்,’ அடுத்த சில நாளில் மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன், ஆயுஷ் அணியில் இணைவார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்வின் நீக்கம்
சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 38. கடந்த 2015க்குப் பின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய இவர், 6 போட்டியில் 5 விக்கெட் சாய்த்து, 12 ரன் மட்டும் எடுத்தார். தவிர, துவக்க வீரர் கான்வே 3 போட்டியில் 94 ரன் எடுத்தார். நேற்று இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு ஷேக் ரஷித், ஜமை ஓவர்டன் சேர்க்கப்பட்டனர்.
‘ஸ்பைடர் மேன்’ திரிபாதி
கலீல் அகமது அடித்த பந்தை மார்க்ரம் அடித்தார். ‘கவர் பாயிண்ட்’ திசையில் பந்து உயரமாகச் சென்றது. அருகில் இருந்த திரிபாதி, ‘ஸ்பைடர் மேன்’ போல ஓடி வந்து, முன்னோக்கி பாய்ந்து கேட்ச் செய்து அசத்தினார்.
4 விக்கெட்
பிரிமியர் தொடரின் 18 வது சீசனில் முதல் ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் சென்னை அணியின் கலீல் அகமது. இவர், 7 போட்டியில் 4 விக்கெட் சாய்த்துள்ளார். ராஜஸ்தானின் ஆர்ச்சர் (3), மும்பையின் டிரன்ட் பவுல்ட் (2), லக்னோவின் ஷர்துல் தாகூர் (2), குஜராத்தின் முகமது சிராஜ் (2) அடுத்தடுத்து உள்ளனர்.
முதன் முறை
பிரிமியர் தொடரில் (2025) நேற்று, ‘பவர் பிளே’ ஓவரில் எதிரணியை முதன் முறையாக 50 ரன்னுக்குள் நேற்று கட்டுப்படுத்தியது சென்னை அணி. முதல் 6 ஓவரில் லக்னோ அணி, 42/2 ரன் மட்டும் எடுத்தது.
19 ‘ஸ்டம்பிங்’
பிரிமியர் அரங்கில் ஜடேஜா-தோனி இணைந்து 9 முறை ‘ஸ்டம்பிங்’ முறையில் விக்கெட் சாய்த்துள்ளர். அதிகமுறை இதுபோல சாதித்த பவுலர்-விக்கெட் கீப்பர் ஜோடி வரிசையில் முதலிடத்தை அமித் மிஸ்ரா-தினேஷ் கார்த்திக் (9), பிரக்ஞான் ஓஜா-கில்கிறிஸ்ட் (9) ஜோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.
* தவிர அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான ஜோடி வரிசையில் ஜடேஜா-தோனி (19 விக்.,) இரண்டாவது இடத்தில் உள்ளனர். ரபாடா-ரிஷாப் (20) முதலிடத்தில் உள்ளனர்.
பகிரவும்: