
15.04.2025 – பாளையங்கோட்டை
இது பற்றிய விவரம் வருமாறு:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளி வழக்கம் போல் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, 8ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றுள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டப்பட்ட ஆசிரியரும் மருத்துவமனையில் உள்ளார்.
அரிவாளால் வெட்டிய மாணவன் பின்னர், பாளையங்கேட்டை போலீசிடம் சரண் அடைந்தான். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.
4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று (ஏப்.15) பள்ளி திறக்கப்பட்டதும், அரிவாளுடன் வகுப்பறைக்கு வந்த மாணவன் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
பகிரவும்: