
16.04.2025 – முல்லன்புர்
பிரிமியர் லீக் தொடரில் நேற்று பஞ்சாப், முல்லன்புரில் நடந்த போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் மொயீன் அலி நீக்கப்பட்டு, நோர்க்யா சேர்க்கப்பட்டார்.
நல்ல துவக்கம் – பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா ஜோடி துவக்கம் கொடுத்தது. வைபவ் அரோரா ஓவரின் முதல் மூன்று பந்தில் 4, 6, 4 என விளாசினார் பிரப்சிம்ரன். ஆர்யா தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, 20 ரன் கிடைத்தன. உடனே, கேப்டன் ரஹானே, ஹர்ஷித் ராணாவை பந்து வீச அழைத்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
முதல் பந்தில் 82 மீ., துாரத்திற்கு சிக்சர் அடித்த ஆர்யா (22 ரன், 12 பந்து) அடுத்த பந்தில் ராமன்தீப்பிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். அடுத்து வந்த ஷ்ரேயசை, இரண்டாவது பந்தில் ‘டக்’ அவுட்டாக்கி மிரட்டினார் ஹர்ஷித் ராணா. மறுபக்கம் வருண் சக்ரவர்த்தி பந்தை சுழற்றினார்.
இவரது முதல் ஓவரில், 2 ரன் மட்டும் எடுத்த ஜோஸ் இங்லிஸ், போல்டானார். ஹர்ஷித் ராணா, பிரப்சிம்ரனை (30) வெளியேற்றி, அதிர்ச்சி கொடுத்தார்.
இதன் பின் அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. நோர்க்யா வீசிய போட்டியின் 9 வது ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரி அடித்த வதேரா (10), வெங்கடேஷிடம் ‘பிடி’ கொடுத்து வெளியேறினார். மீண்டும் வந்த வருண் சக்ரவர்த்தி, மேக்ஸ்வெல்லை (7) போல்டாக்கினார்.
மறுபக்கம் சுழல் ‘மாயாவி’ சுனில் நரைன், 11வது ஓவரை வீசினார். முதல் பந்தில் சுயாஷ் (4) வீழ்ந்தார். கடைசி பந்தில் யான்சென் (1) போல்டானார். வருண் சக்ரவர்த்தி பந்தில் ஷஷாங்க் சிங் (18) ஒரு சிக்சர் அடிக்க, பஞ்சாப் அணியின் ஸ்கோர், ஒருவழியாக 100 ரன்களை (104/8) கடந்தது. ஷஷாங்க், 18 ரன் எடுத்த போது, வைபவ் பந்தில் அவுட்டானார். கடைசியில் பார்ட்லெட் (11) ரன் அவுட்டானார்.
பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்னுக்கு சுருண்டது. கோல்கட்டா சார்பில் ஹர்ஷித் ராணா 3, வருண் சக்ரவர்த்தி 2, சுனில் நரைன் 2 விக்கெட் சாய்த்தனர்.
சஹால் ‘நான்கு’ – கோல்கட்டா அணி, 14.1 ஓவரில் இலக்கை அடைந்தால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கியது. எளிதான இந்த ஸ்கோரை வேகமாக எட்டும் என நம்பப்பட்டது. மாறாக துவக்கத்தில் குயின்டன் டி காக் (2), சுனில் நரைன் (5) ஜோடி ‘ஷாக்’ கொடுத்தது. ரஹானே, ரகுவன்ஷி ஜோடி அணியை (62/2) மீட்டது.
பின் திடீரென சரிவு ஏற்பட்டது. சஹால் சுழலில் ரஹானே (17), ரகுவன்ஷி (37) அவுட்டாகினர். மேக்ஸ்வெல் வலையில் வெங்கடேஷ் (7) சிக்கினார். மீண்டும் மிரட்டிய சஹால் அடுத்தடுத்த பந்தில் ரிங்கு சிங், ராமன்தீப்பை (0) அவுட்டாக்கினார்.
ரசல் ‘போல்டு’ – சஹால் ஓவரில் ஆன்ட்ரி ரசல், 2 சிக்சர், 1 பவுண்டரி அடிக்க, கோல்கட்டா வாய்ப்பு பிரகாசமானது. 31 பந்தில் 17 ரன் தேவைப்பட, கைவசம் 2 விக்கெட் மட்டும் மீதம் இருந்தன. இந்நிலையில் அர்ஷ்தீப் பந்தில், வைபவ் (0) அவுட்டானார். யான்சென் ‘வேகத்தில்’ ரசல் (17) போல்டாக, கோல்கட்டா அணி 15.1 ஓவரில் 95 ரன்னுக்கு சுருண்டது.
பஞ்சாப் சார்பில் சஹால் 4, யான்சென் 3 விக்கெட் சாய்த்தனர். இரு அணி பவுலர்களும் ஆதிக்கம் செலுத்த, 20 விக்கெட்டுகள் சரிந்தன.
7 ரன், 5 விக்கெட் – கோல்கட்டா அணி நேற்று, ஒரு கட்டத்தில் 72/3 என இருந்தது. அடுத்து 7 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 79/8 என தவித்தது. கடைசியில் 95 ரன்னுக்கு சுருண்டது.
குறைந்த ஸ்கோரில்… பிரிமியர் அரங்கில் குறைந்த ஸ்கோர் எடுத்த போதும், போட்டியை வென்ற அணி என பெருமை பெற்றது பஞ்சாப். நேற்று 111 ரன் எடுத்த நிலையில், 16 ரன்னில் வென்றது.
முன்னதாக சென்னை அணி 2009ல் 116/9 ரன் எடுத்த போதும், 24 ரன்னில் வெற்றி பெற்றிருந்தது.
நரைன் ’36’ நேற்று 2 விக்கெட் சாய்த்தார் கோல்கட்டா பவுலர் சுனில் நரைன். பிரிமியர் தொடரில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 36 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக உமேஷ் யாதவ் 35 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
15 ரன், 4 விக்கெட் – பஞ்சாப் அணி நேற்று 3.1 ஓவரில் 39/0 ரன் எடுத்திருந்தது. அடுத்த 17 பந்தில் 15 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 6 ஓவரில் 54/4 என இருந்தது.
111 ரன் – கோல்கட்டாவுக்கு எதிராக 111 ரன்னுக்கு சுருண்ட பஞ்சாப் அணி, பிரிமியர் அரங்கில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2017ல் 73 ரன்னுக்கு (எதிரணி-புனே) ஆல் அவுட்டானது முதலிடத்தில் உள்ளது. பெங்களூருவுக்கு எதிராக 2015, 2018ல் தலா 88 ரன்னில் சுருண்டது, அடுத்து உள்ளது.
பகிரவும்: