18.04.2025 – பாங்காக்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி, மியான்மரில் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. திங்கியான் திருவிழா என அழைக்கப்படும் இவ்விழாவை, சமீபத்திய நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடவில்லை.
இதற்கிடையே, அந்நாட்டு சிறைகளில் வாடும் 13 வெளிநாட்டினர் உட்பட 4,893 கைதிகளை, புத்தாண்டு தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவ அரசு விடுவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வெளிநாட்டு கைதிகளை, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், சில கைதிகளின் தண்டனை காலத்தையும் அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.
எனினும், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்களுக்கு எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. இது தவிர, சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் பிரதமருமான ஆங் சான் சூகி உட்பட அரசியல் நோக்கங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீதும் மியான்மர் அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.