
18.04.2025 – கிறித்தேய் பிராங்கோ
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 94 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025 சனிக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக மாவீரர் குடும்பத்தினரானல் சுடர் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து நிகழ்வின் விருந்தினர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சங்ககூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன்,தமிழ்ச்சோலை தலைமையப்பணியப் பொறுப்பாளர் திரு. நாக யோதீசுவரன், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிர்வாகத்தலைவர், திரு. கி. மதியழகன், பெற்றோர் சார்பாக திருமதி. தி. சர்மிளா இளையோர் அமைப்பாக செல்வி ச. காயத்திரி அவர்களும் ஏற்றி வைத்து தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை ஆறுமுகம் சிறீகிருஸ்ணகாந்தா ஆற்றியிருந்தார். பேச்சுக்கள், கவிதை, பரதநடனம்,, பாட்டு, பட்டிமன்றம், தாயகப்பாடல் நடனங்கள்,காவடி, பாரதியார் பாடல், கடல்பாடல், தமிழீழத்தேசியத்தலைவர் சிந்தனைத் துளிகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
தமிழ்ச்சோலைப்பள்ளியின் 25 ஆவது விழிகள் என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் வெளியிட்டு வைத்ததுடன் சிறப்புரையையும் ஆற்றியிருந்தார். தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களையும் நினைவுகூர்ந்ததோடு இன்றைய நாளில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டவரும், பிரான்சில் இன்று நாட்டின் உயர் பதவியில் இருக்கும் முன்னைநாள் தமிழ்ச்சோலை மாணவரையும் வாழ்த்தியதோடு இதேபோல பலநூற்றுக்கணக்கான எமது பிள்ளைகள் சிறந்த இடத்தில் வாழும் நாட்டில் இருந்து வருவதையும், இவர்கள் எதிர்காலத்தில் எமது இனம் கண்ட கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள். அதற்கு எமது பெற்றோர்கள் இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பின் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்;
தொடர்ந்து திருக்குறள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள், விளையாட்டுப்போட்டியில், வன்னிமயில் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நன்றியுரையை திருமதி. கே.. நிறைசெல்வி அவர்கள் ஆற்றியிருந்தார்.




























பகிரவும்: