
19.04.2025 – ஆமதாபாத்
பிரீமியர் லீக் தொடரின் 35வது லீக் ஆட்டத்தில் டில்லி, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டில்லி அணி, ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தை தொடங்கியது. 9 பந்துகளில் 18 ரன்களை குவித்த அபிஷேக் போரல் அர்ஷத் கான் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து வந்த கே.எல்.ராகுல் (28), கருண் நாயர் (31) ஆகியோர் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, ஸ்டப்ஸ் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி அதிரடியாக விளையாடியது. ஸ்டப்ஸ் (31) ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு, சிறப்பாக ஆடி வந்த கேப்டன் அக்ஷர் படேல் (39), விப்ரஜ் நிகம் (0) ஆகியோர் பிரசித் கிருஷ்ணாவில் ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதிரடி வீரர் அஷிதோஷ் சர்மா கடைசி ஓவர் வரை அணிக்காக ரன் குவிக்க முயன்றார். இறுதியில் 37 ரன்னில் சாய் கிஷோரிடம் வீழ்ந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு டில்லி அணி 203 ரன்கள் குவித்தது. பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து 204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் (7), ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் (36) ஓரளவுக்கு ரன்களை குவித்து அவுட்டானார்.
அதன்பிறகு, ஜோடி சேர்ந்த பட்லர், ரூதர்போர்டு இணை, சிறப்பாக ஆடியது. இருவரும் சேர்ந்து 119 ரன்களை குவித்தனர். இறுதியில் ரூதர்போர்டு 43 ரன்னில் அவுட்டானார். மறு முனையில் அதிரடியாக ஆடி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 97 ரன்களில் இருந்த போது, கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஸ்டார்க் வீசிய முதல் இரு பந்துகளை, திவாட்டியா, சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால், பட்லர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, முதல்முறையாக 200 ரன்களுக்கு அதிகமான இலக்கை சேஸ் செய்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
பகிரவும்: