
20.04.2025 – கோவை
முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், கோவையின் வடமேற்கு திசையில் 15 கி.மீ., தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து 741 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில், பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. நாளுக்கு நாள், பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
உயரமான சிலை
அடுத்தகட்டமாக, உலகத்திலேயே உயரமான, 184 அடி உயர முருகன் சிலை அடிவாரத்தில் நிறுவப்படுகிறது.
இதற்கான பீடம் மட்டுமே, 38 அடி உயரத்துக்கு அமைகிறது. இச்சிலை, 110 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் சிலரது நன்கொடையில் உருவாக்கப்படுகிறது.
நட்சத்திர அமைப்பின் மையத்தில் இச்சிலை அமையும். நட்சத்திர குறியீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் முருகனின் அறுபடை வீடுகளின் ஒவ்வொரு அமைப்பும் உருவாக்கப்படும்.
முருகனின் அறுபடை வீடுகள் என சொல்லப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கும் முருக பெருமானை, மருதமலையிலும் தரிசிக்கும் வகையில், சிறிய அளவில் சன்னிதி உருவாக்கப்படுகிறது.
குறவன் குறத்தி குடில்
அடிவாரத்துக்குள் நுழைந்ததும் குறவன், குறத்தி வரவேற்கும் வகையில் தனிக்கூடம் அமைக்கப்படுகிறது. அதை கடந்து சென்றால், யானை கூட்டங்களும், மயில்களும், சேவல்களும் பக்தர்களை வரவேற்கும். அவற்றை கடந்தால் காளை மாடுகளும், காளை பூட்டிய மாட்டு வண்டியும் இருக்கும்.
சிலைக்கு முன் மெகா சைஸ் வேல் நிறுவப்படுகிறது. முருகனின் வாகனமான மயில், வேல் அருகே நிற்கும் வகையில் சிலை வடிவமைக்கப்படுகிறது. சுற்றிலும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் மயில் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
இளைப்பாற மண்டபம்
முருகனை தரிசிக்க படிக்கட்டுகள் வழியாக நடந்தும், கோவில் பஸ்கள் வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் ஏசி பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலை படிக்கட்டுகளில் நடந்து செல்லும்போது, இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே மண்டபங்கள், கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
8 ஏக்கர் நிலம்
பாரதியார் பல்கலை அருகே புதிதாக பஸ் ஸ்டாண்ட் உருவாக்க, 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அரசு பஸ்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். தனியார் டூரிஸ்ட் வாகனங்கள் மற்றும் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும். யாத்ரீகர்கள் தங்குவதற்கு பிரத்யேக வளாகம் கட்டப்படுகிறது.
பல்கலை அருகே நுழைவாயில் அமைக்கப்பட்டு, பக்தர்கள் நடந்து சென்று, அடிவாரத்தில் நிறுவப்படும் முருகன் சிலையை தரிசித்து விட்டு, மலைக்கு செல்ல முடியும். 184 அடி உயர சிலை நிறுவப்படும் பீடத்துக்குள், முருகனின் அறுபடை வீடுகளின் தல வரலாறு கண்காட்சி அமைக்கப்படும்.
அதை சுற்றிப்பார்த்தால், ஒவ்வொரு தலத்தின் வரலாறு, சிறப்புகளை அறியலாம். இனி, மருதமலை முருகனின் அவதாரம் உலக பக்தர்களால் போற்றப்படும் என்பது உறுதி!
‘கொங்கு மக்களின் கனவு’
மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:உலகின் உயரமான முருகன் சிலை அமைந்திருக்கும் இடம் என்ற பெருமை, மருதமலைக்கு கிடைக்கப் போகிறது. தனியார் சிலரது நன்கொடை மூலமாக சிலை நிறுவப்படும். இதர பணிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக செய்யப்படும். பக்தர்களின் வசதிக்காக, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது. மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார அலுவலகம், மாநகராட்சி வார்டு அலுவலகம் அமைக்கப்படும். ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், மலை அடிவாரத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க குளம் உருவாக்க இருக்கிறோம்.சுற்றுலா வளர்ச்சி அடையும்; கோவில் வருவாய் பெருகும். முருகனின் அருள் எட்டுத்திசைக்கும் பரவும். கொங்கு மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
பகிரவும்: