
20.04.2025 – கொழும்பு
இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
கடுவலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றார்.
அதற்கமைய குறித்த 7 ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவில் ஏதேனும் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடாகும்.
இதில் உள்ள அபாய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில் மோதல்கள் காணப்படுகின்றன.
அவை தீவிரமடைந்து யுத்த நிலைமை ஏற்பட்டால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று சிந்திக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் நாமே போய் சிக்கிக் கொள்கின்றோம்.
முந்தைய அரசாங்கங்கள் மிகத் தெளிவாக அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றின. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல.
நாம் இந்தியாவுடன் சிறந்த உறவைப் பேண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக இடத்தை வழங்கும் போது பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
ஜே.வி.பி.யினர் எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தியாவை கடுமையாக எதிர்த்து விமர்சித்ததால் தற்போது அதனை சரி செய்வதற்காக இவ்வாறான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள 7 ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் என்ன என்பதை அமைச்சரவையோ, பாராளுமன்றமோ அறிந்திருக்கவில்லை.
இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பிய போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வழங்கப்படாது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? இவை தொடர்பில் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
பகிரவும்: