
21.04.2025 – காத்மாண்டு
நம் அண்டை நாடான நேபாளம், இமயமலை அடிவாரத்தில் உள்ளது. நமக்கும், சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ள நேபாளத்தின் பிரதமராக ஷர்மா ஒலி உள்ளார். இவர், ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இங்கு, முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமலுக்கு வந்தது.
இருப்பினும், 17 ஆண்டுகளில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை. அரசியல் கூட்டணி குழப்பம் உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, 17 ஆண்டுகளில், 13 பிரதமர்களை நேபாளம் கண்டுள்ளது.
தற்போதைய பிரதமர் ஷர்மா ஒலியின் ஆட்சியிலும் மக்கள் திருப்தியடையாததால், அங்கு மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் போராட்டம் வெடித்தது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்ததை அடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டனர்.
அப்போது வெடித்த வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர். முன்னாள் மன்னர் ஞானேஷ்வரின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தை கட்டவிழ்த்தாக புகார்கள் எழுந்தன. பதற்றத்தை தணிக்க, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் முக்கிய கட்டடங்கள் உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தியும், நேபாளத்தை ஹிந்து நாடாக நிறுவக் கோரியும் அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் ஆர்.பி.பி., எனப்படும் ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்ட அக்கட்சியினர், அரசுக்கு எதிராக பேரணியை நடத்தினர். அப்போது, மன்னராட்சியை நிறுவ வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிஜுலிபஜார்-பனேஷ்வர் பகுதியில் நடந்த போராட்டத்தில், ஆர்.பி.பி., கட்சியின் தலைவர் ராஜேந்திர லிங்டன், மூத்த தலைவர்கள் பசுபதி ஷும்ஷேர் ராணா உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மன்னராட்சியை அமைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என, ஆர்.பி.பி., கட்சியினர் அறிவித்தனர். நயா பனேஷ்வர் பகுதியில் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி மற்றொரு குழுவும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்தது. காத்மாண்டுவில் மூன்று இடங்களில் போராட்டம் நடந்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, நயா பனேஷ்வர், பிஜுலிகசார், மைதிகர், பத்ரகாளி மற்றும் பலுவத்தார் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலுவாதரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் சி.பி.என்., தலைவர் புஷ்ப கமல் தஹால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, போராட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அரசியலமைப்பை பாதுகாப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அரசு எச்சரிக்கை
ஆர்.பி.பி., கட்சியினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை அடுத்து, நேபாள உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மீறும் வெளிப்படையான நடவடிக்கைகள் எப்போதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அரசுக்கு எதிராகவும், சட்டம் – ஒழுங்கை மீறும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
பகிரவும்: