
21.04.2025 – ரோம்
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. வாடிகன் நகரத்தில் வசித்து வந்தார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் சற்று தேறிய நிலையில் மார்ச் 23ல் மீண்டும் வாடிகன் திரும்பினார்.
வழக்கமான பணிகளை பார்க்கவும் தொடங்கினார். நேற்று ஈஸ்டர் முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 21) காலை போப் பிரான்சிஸ், 88, காலமானதாக, வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு, பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்து வந்த பாதை!
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிஸ் நகரில் 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்தார்.
1969ம் ஆண்டு கத்தோலிக்க பாதிரியராக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவிகளை பெற்ற இவர் 2001ம் ஆண்டில் கார்டினல் ஆக பதவி உயர்த்தப்பட்டார்.
2013ம் ஆண்டு போப் ஆக இருந்த பெனடிக்ட் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய போப் ஆக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க சமுதாயத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக சிறுவயது முதலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் போப் பிரான்சிஸ்.
ஏழை, எளிய மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்காகவும் அவர் சேவை ஆற்றினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்து வழிகாட்டினார். அவருடன் எனது சந்திப்பை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். – இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இரக்கமுள்ள முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ். அவரது மறைவால் வருத்தமடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகிரவும்: