
21.04.2025 – சென்னை
இறைநேசர் ‘போப் ஆண்டவர் பிரான்சிஸ்’ அவர்கள் மறைவு குறித்து செய்தியாளர்கள் சீமான் கூறியதாவது:
கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவர், உலகெங்கும் வாழும் கிறித்துவப் பெருமக்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய இறைநேசர் ‘போப் ஆண்டவர் பிரான்சிஸ்’ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
“ஆறுகள் தங்கள் தண்ணீரைத் தாங்களே குடிப்பதில்லை; மரங்கள் தங்கள் பழங்களைத் தாங்களே உண்பதில்லை; சூரியன் தனக்காகப் பிரகாசிப்பதில்லை; பூக்கள் தங்களுக்காக மட்டுமே மணம் பரப்புவதில்லை; மற்றவர்களுக்காக வாழ்வது என்பது இயற்கையின் விதி!” என்ற உலகப் பேரன்புக் கோட்பாட்டினை மொழிந்து, நாம் வாழும் பூமியையும் நம்முடன் வாழும் உயிர்களையும் நேசித்து அவற்றின் மீது அன்பும், பரிவும் கொண்டு வாழ்வதே உண்மையான இறைபக்தி என்பதை தம் புனித பெருவாழ்வினால் உலகிற்கு உணர்த்திய பெருமகன்!
இந்த உலகத்தை நம் மூதாதைகளிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றோம்; அதே நேரம், நமக்குப் பின்வரும் தலைமுறையினரிடமிருந்து கடனாகவும் பெற்றுள்ளோம்! ஆகவே, அதை நாம் பாதுகாப்பாக அவர்களுக்குக் கையளிக்க வேண்டும். ஆனால் அந்தக் கடமையை நாம் முற்றிலும் மறந்து, இயற்கையை அளவுக்கதிகமாகச் சுரண்டிவிட்டோமே என மனம் வருந்திய போப் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பேசியும், எழுதியும் நாம் வாழும் பூமியைப் பாதுகாக்க அரும்பணி ஆற்றிய பெருந்தகை!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள கிறித்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மதம் கடந்து மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர், இயற்கையைப் பாதுகாக்க முனைந்த இறைதொண்டர், போற்றுதலுக்குரிய போப் பிரான்சிஸ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
https://x.com/Seeman4TN/status/1914290803976888369?t=ixkeKV-aUvRnf80FzM9PQg&s=19… –
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்தமிழர்கட்சி
இவ்வாறு சீமான் கூறினார்.
பகிரவும்: