
23.04.2025 – ஸ்ரீநகர்
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் – பெஞ்சமின் நெதன்யாகு
எனது அன்பு நண்பர் பிரதமர் மோடி. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் டஜன் கணக்கான அப்பாவிகளைக் கொன்று காயப்படுத்திய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் நிற்கிறது.
ஐ.நா. கண்டனம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர், ” பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றார்.
இத்தாலி பிரதமர் – மெலோனி
இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலால் மிகவும் வருத்தம் அடைந்தேன். பயங்கரவாத தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தாலி தனது இரங்கலைத் தெரிவிக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி, காயம் அடைந்ததற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான்
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியம் பெறவும் விரும்புகிறோம்.
இலங்கை
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், ”உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பகிரவும்: