24.04.2025 – யாழ்.
யாழ். பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம் இது ஆபத்தானது.
எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும் இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பேராசிரியர். வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது.
இணுவில், வட்டுக்கோட்டை ,சில்லாலை, ஏழாலை பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள். சித்த மருத்துவத் துறைக்கான வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர்.
சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள் பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள்.
துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள்.
சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது.
இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள்,திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம் போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்ப தென்பது முடியாத விடயம்.
இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள் ? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை ,பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.
எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது.