
24.04.2025 – பெங்களூரு
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
கோலி அபாரம்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் கோலி. துஷார் தேஷ்பாண்டே வீசிய 5வது ஓவரில் சால்ட் 2, கோலி ஒரு பவுண்டரி விரட்டினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது ஹசரங்கா பந்தில் சால்ட் (26) அவுட்டானார். சந்தீப் சர்மா வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த கோலி, 32 பந்தில் அரைசதம் கடந்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர் அடித்த தேவ்தத் படிக்கல், 26 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது ஆர்ச்சர் ‘வேகத்தில்’ கோலி (70) வெளியேறினார்.
சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில் படிக்கல் (50), கேப்டன் ரஜத் படிதர் (1) அவுட்டாகினர். ஆர்ச்சர், பரூக்கி பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த டிம் டேவிட், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். டிம் டேவிட் (23) ‘ரன்-அவுட்’ ஆனார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. ஜிதேஷ் சர்மா (20) அவுட்டாகாமல் இருந்தார்.
ஜெய்ஸ்வால் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால், யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால், ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது புவனேஷ்வர் பந்தில் சூர்யவன்ஷி (16) அவுட்டானார்.
ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் (49), அரைசத வாய்ப்பை இழந்தார். ‘பவர்-பிளே’ ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 72/2 ரன் எடுத்திருந்தது. ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரியான் பராக் (22), குர்ணால் பாண்ட்யாவிடம் சரணடைந்தார். தொடர்ந்து அசத்திய குர்ணால் ‘சுழலில்’ நிதிஷ் ராணா (28) சிக்கினார்.
ஜுரெல் ஆறுதல்: சுயாஷ் சர்மா, குர்ணால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் துருவ் ஜுரெல். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ ஹெட்மயர் (11) ‘பெவிலியன்’ திரும்பினார். புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த துருவ் ஜுரெல் (47), ஹேசல்வுட் பந்தில் அவுட்டானார். ஜோப்ரா ஆர்ச்சர் ‘டக்-அவுட்’ ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்துவீசினார். முதல் பந்தில் ஷுபம் துபே (12) அவுட்டானார். மூன்றாவது பந்தில் ஹசரங்கா (1) ‘ரன் அவுட்’ ஆனார். இந்த ஓவரில் 5 ரன் மட்டும் கிடைத்தது.
ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 194 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பருக்கி (2), தேஷ்பாண்டே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இது அதிகம்
பிரிமியர் லீக் அரங்கில் ராஜஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை (205/5) பதிவு செய்தது பெங்களூரு. இதற்கு முன், 2015ல் பெங்களூருவில் நடந்த போட்டியில் 200/7 ரன் எடுத்திருந்தது.
பகிரவும்: