
24.04.2025 – யேர்மனி
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகம் யேர்மனியில் 19-04-2025 அன்று வெகுசிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பணியகத்தை இளம் மாணவர்கள் திறந்து வைத்து உள்ளே சென்றனர். அடுத்த சந்ததியைச் சேர்ந்த இளையோர் எல்லாத்துறைகளிலும் வளர்ந்து வருவதுடன், பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயலாற்றியும் வருகின்றார்கள். அதனடிப்படையில் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையும் இளையோருக்கு முன்னுரிமை வழங்கி சிறப்பித்து வருகின்றது.
தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் உறுப்பினர்கள், எல்லா நாட்டுக் கல்விக்கழகங்களின் பொறுப்பாளர்கள், கல்விப்பொறுப்பாளர்கள் தமிழரின் சொத்துக்களாகிய இலக்கியங்களை ஏந்தியவாறு உள்ளே சென்றனர்.
தமிழ் இலக்கியங்களான காப்பியங்கள், அறநெறி நூல்கள், வரலாற்று நூல்கள், இலக்கண நூல்கள், இன்னும் பல்வேறு இலக்கியங்கள் தமிழரின் பண்டைய வாழ்வியலை, பண்பாட்டை, கலையை, வரலாற்றை, வீரத்தை எடுத்து விளக்குகின்றன. அத்தகைய பல்வேறு இலக்கியங்கள் மூன்று கழக காலங்களிலும் எழுந்திருந்தாலும் கடைக்கழக நூல்களே எம்மிடம் எஞ்சியுள்ளன. எம்மிடம் இருக்கின்ற நூல்களைப் பாதுகாக்க வேண்டும், அவற்றில் கூறப்பட்டுள்ள சிறந்த கருத்துகளை மக்கள் உள்வாங்க வேண்டும்.
அதற்கு தொல்பெரும் இலக்கியங்கள் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதுவும் கல்வி நிறுவனங்களில் இந்நூல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்குடன் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இந்நூல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர் அவர்கள் கையொப்பமிட்டு பணியகத்தின் செயற்பாடுகளைத் தொடக்கி வைத்தார்.
இத்திறப்புவிழா இனிதே நிறைவுபெற்ற பின்னர், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆண்டுப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பகிரவும்: