26.04.2025 – சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. சென்னை ‘லெவன்’ அணியில் ரச்சின் ரவிந்திரா, விஜய் சங்கர் நீக்கப்பட்டு டிவால்ட் பிரவிஸ், தீபக் ஹூடா இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
சென்னை அணியின் பேட்டிங் இம்முறையும் எடுபடவில்லை. முகமது ஷமி வீசிய முதல் பந்தில் ஷேக் ரஷீத் (0) அவுட்டானார். ஆயுஷ் மாத்ரே ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். கம்மின்ஸ், உனத்கட் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார். ஹர்ஷல் படேல் ‘வேகத்தில்’ சாம் கர்ரான் (9) வெளியேறினார். கம்மின்ஸ் பந்தில் ஆயுஷ் மாத்ரே (30) அவுட்டானார்.
ஜீஷான் அன்சாரி பந்தில் ஒரு சிக்சர் விளாசிய ரவிந்திர ஜடேஜா (21), கமிந்து மெண்டிஸ் ‘சுழலில்’ போல்டானார். அடுத்து வந்த ஷிவம் துபே, ஷமி வீசிய 11வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரவிஸ், கமிந்து மெண்டிஸ் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது, ஹர்ஷல் படேல் பந்தை துாக்கி அடித்த பிரவிஸ் (42), கமிந்து மெண்டிசின் கலக்கல் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். உனத்கட் பந்தில் துபே (12) அவுட்டானார். அடுத்து தல தோனி களமிறங்கினார். அன்சாரி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். இந்த நேரத்தில் அவசரப்பட்ட தோனி (6), ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி கட்டத்தில் தீபக் ஹூடா (22) ஆறுதல் தந்தார்.சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (0) ஏமாற்றினார். அடுத்து வந்த இஷான் கிஷான், கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். டிராவிஸ் ஹெட் (19) நிலைக்கவில்லை. ஜடேஜா ‘சுழலில்’ கிளாசன் (7) சிக்கினார். இஷான் கிஷான் (44), நுார் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரான், ஜடேஜா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட அனிகேத் வர்மா, 19 ரன்னில் அவுட்டானார்.
நுார் அகமது பந்தில் 2 பவுண்டரி விரட்டினார் கமிந்து மெண்டிஸ். மறுமுனையில் அசத்திய நிதிஷ் குமார் ரெட்டி, பதிரானா வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஐதராபாத் அணி 18.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கமிந்து (32), நிதிஷ் ரெட்டி (19) அவுட்டாகமல் இருந்தனர்.
ஏழாவது தோல்வியை பெற்ற சென்னை அணியின் ‘பிளே-ஆப்’ வாய்ப்பு முடிவுக்கு வந்தது. மீதமுள்ள 5 போட்டியில் வெற்றி பெற்றால், 14 புள்ளி பெறும். ‘ரன்-ரேட்டில்’ பின்தங்கி இருப்பதால் சென்னை அணி வெளியேறுவது உறுதி.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னைக்கு எதிராக ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகள் இங்கு விளையாடிய 6 போட்டியில் சென்னை 5, ஐதராபாத் ஒரு போட்டியில் வென்றன.
ஐதராபாத் அணிக்கு சுழற்பந்துவீச்சாளரான கமிந்து மெண்டிஸ், பேட்டிங் (32* ரன்), பவுலிங்கில் (1/26, 3 ஓவர்) கைகொடுத்தார். ஆனால் சென்னை அணியில், உள்ளூர் ‘சுழல்’ வீரரான அஷ்வினை தேர்வு செய்யாதது அதிர்ச்சி அளித்தது.
சென்னை அணி கேப்டன் தோனி, தனது 400வது ‘டி-20’ போட்டியில் களமிறங்கினார். இம்மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர், 25வது சர்வதேச வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் ரோகித் (456 போட்டி), தினேஷ் கார்த்திக் (412), கோலி (408), 400 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். வெஸ்ட் இண்டீசின் போலார்டு, அதிகபட்சமாக 695 ‘டி-20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2006ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டி-20’ போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற தோனி, இந்தியா, சென்னை, புனே, ஜார்க்கண்ட் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி ‘டி-20’ உலக கோப்பை (2007) வென்றது. பிரிமியர் லீக் அரங்கில் 5 (2010, 2011, 2018, 2021, 2023), சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறை (2010, 2014) சென்னை அணி சாம்பியன் ஆனது.
சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே 17, ஷேக் ரஷீத் 20, துவக்கம் தந்தனர். பிரிமியர் லீக் அரங்கில், துவக்க வீரர்களாக களமிறங்கிய இருவரும், 21 வயதுக்குட்பட்டு இருப்பது 5வது முறை. ஏற்கனவே சஞ்சு சாம்சன்-ரிஷாப் பன்ட், சுப்மன் கில்-டாம் பான்டன், அபிஷேக் சர்மா-பிரியம் கார்க் (இரு முறை) இப்படி களமிறங்கினர்.
சென்னையின் ஆயுஷ் மாத்ரே-ஷேக் ரஷீத் (38 ஆண்டு, 131 நாள்) ஜோடி, பிரிமியர் லீக் அரங்கில் களமிறங்கிய 2வது இளம் துவக்க ஜோடியானது. முதலிடத்தில் ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால் 23, வைபவ் சூர்யவன்ஷி 14, ஜோடி (37 ஆண்டு, 135 நாள், எதிர்: லக்னோ, 2025) உள்ளது.
பிரிமியர் லீக் அரங்கில் முகமது ஷமி, ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்தது நான்காவது முறை. ஏற்கனவே காலிஸ் (2014), ராகுல் (2022), பில் சால்ட் (2023) ஆகியோரை முதல் பந்தில் வெளியேற்றினார்.
சென்னை வீரர் நுார் அகமதுவின் ‘பேட்’, விதிமுறைக்கு உட்பட்டு இல்லாததால் ஆடுகள அம்பயர் அதனை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பின் வேறு ‘பேட்’ கொண்டுவரப்பட்டு நுார் அகமது விளையாடினார்.