மே 01 2025 – ராமேஸ்வரம்
ஏப்., 16ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ‘4 ஸ்டார்’ எனும் சரக்கு கப்பல் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து கர்நாடகா கார்வார் துறைமுகம் செல்ல இருந்தது. இந்த கப்பல் 57.5 மீ., நீளம், 11 மீ., அகலம், 833 டன் எடை கொண்டது.
இது ஒரு மணிக்கு அதிகபட்சமாக 6 கடல் மைல் (11 கி.மீ.,) வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால் இக்கப்பல் புறப்பட்ட நாள்முதல் வங்கக் கடலில் சூறாவளிக் காற்று வீசியதால் மணிக்கு 2 கடல் மைல் (3.68 கி.மீ.,) வேகத்தில் ஊர்ந்தபடி சென்றது.
இதனால் ஏப்.,23ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து செல்ல வேண்டிய இக்கப்பல் ஏப்., 28ல் பாம்பன் கடற்கரை வந்தது. இதையடுத்து நேற்று மதியம் முதன் முதலாக வணிக ரீதியாக பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் பழைய ரயில் துாக்கு பாலம் திறந்ததும் சரக்கு கப்பல் கடந்து கார்வார் சென்றது.
அப்போது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.