02.05.2025 – ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணி, ராஜஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு ரோகித் சர்மா, ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆர்ச்சர் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசி இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என விளாசினார் ரிக்கிள்டன். மறுபக்கம் தீக்சனா ஓவரில் தன் பங்கிற்கு அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார் ரோகித். கார்த்திகேயா வீசிய 9 வது ஓவரின் முதல் இரு பந்தில் ரோகித், பவுண்டரி அடிக்க, கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரிக்கிள்டன். இவர் 29 பந்தில் அரைசதம் கடந்தார்.
மும்பை அணியின் ஸ்கோர் 10.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது. மீண்டும் தீக்சனா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 31 பந்தில் அரைசதம் எட்டினார். கடந்த 4 இன்னிங்சில் இவர் அடித்த 3வது அரைசதம் இது.
முதல் விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது, தீக்சனா சுழலில் சிக்கினார் ரிக்கிள்டன் (61). அடுத்த சில நிமிடத்தில் ரியான் பராக் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்ட ரோகித், 53 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். பரூக்கி வீசிய 14வது ஓவரில் பாண்ட்யா 1, சூர்யகுமார் 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் எடுக்கப்பட்டன. தொடர்ந்து தீக்சனா, ஆர்ச்சர் பந்துகளில் சிக்சர் அடித்து மிரட்டினார் சூர்யகுமார். பரூக்கி வீசிய 18 வது ஓவரில் பாண்ட்யா, 3 பவுண்டரி, 1 சிக்சர் என விளாச, மொத்தம் 21 ரன் கிடைத்தன.
கடைசி இரண்டு ஓவரை ஆர்ச்சர், ஆகாஷ் மத்வல் சிறப்பாக வீச, 8, 13 என 21 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன் குவித்தது. கடைசி 46 பந்தில் 94 ரன் சேர்த்த சூர்யகுமார் (23 பந்தில் 48, ஸ்டிரைக் ரேட் 208.69), பாண்ட்யா (23 பந்தில் 48, ஸ்டிரைக் ரேட் 208.69) அவுட்டாகாமல் இருந்தனர்.
ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் வைபவ் ‘டக்’ அவுட்டானார். ஜெய்ஸ்வால் (13), நிதிஷ் ராணா (9), ரியான் பராக் (16), ஹெட்மயர் (0), ஷுபம் துபே (15) என யாரும் நிலைக்கவில்லை.
துருவ் ஜுரல் (11) கரண் சர்மா சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய கரண் சர்மா, தீக்சனா (2), கார்த்திகேயாவை (2) திருப்பி அனுப்பினார். கடைசியில் ஆர்ச்சர் (30) அவுட்டாக, 16.1 ஓவரில் 117 ரன்னில் சுருண்டு தோற்ற ராஜஸ்தான் அணி, ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது.
மும்பை அணி முதல் 5 போட்டியில் 1ல் மட்டும் வென்றது. அடுத்த 6 போட்டியிலும் தொடர்ச்சியாக வென்றது. கடந்த 2008, 2017 வரிசையில், மூன்றாவது முறையாக இதுபோல தொடர் வெற்றியை பதிவு செய்தது. தவிர, 2010, 2013, 2015, 2020 ல் தொடர்ந்து 5 வெற்றி பெற்றுள்ளது.
நேற்று ரோகித்-ரிக்கிள்டன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தனர். கடந்த 2020க்குப் பின் வான்கடே மைதானத்திற்கு வெளியில் நடந்த போட்டிகளில், மும்பை துவக்க ஜோடி எடுத்த முதல் 100 ரன் ‘பார்ட்னர்ஷிப்’ இது ஆனது.
மும்பை வீரர் ரோகித் சர்மா, நேற்று கார்த்திகேயா வீசிய பந்தை (8.2 ஓவர்) பவுண்டரிக்கு அனுப்பினார். நடப்பு பிரிமியர் தொடரில் இது, 1500 வது பவுண்டரியாக அமைந்தது.
பிரிமியர் தொடரின் நடப்பு சீசனில் சூர்யகுமார், தொடர்ந்து 11 வது முறையாக 25 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்தார். இதற்கு முன் 2014ல் உத்தப்பா, 10 முறை இதுபோல ரன் எடுத்ததே அதிகம்.
ரோகித் நேற்று சந்தித்த முதல் 11 பந்தில் 12 ரன் மட்டும் எடுத்திருந்தார். அடுத்த 20 பந்தில் 7 பவுண்டரி உட்பட 38 ரன் எடுத்த ரோகித், 31 பந்தில் அரைசதம் எட்டினார்.
* இதேபோல ‘பவர் பிளேயின்’ முதல் 3 ஓவரில் 16 ரன் மட்டும் எடுத்த மும்பை, அடுத்த 3 ஓவரில் 42 ரன் விளாசியது.
பிரிமியர் அரங்கில் தனது 48 வது அரைசதம் அடித்தார் ரோகித் சர்மா. அதிக அரைசதம் அடித்த வீரர்களில் வார்னர் (62), கோலி (61), தவானுக்கு (53) அடுத்து, 4வது இடத்தில் தொடர்கிறார். அடுத்த 3 இடத்தில் ராகுல் (44), டிவிலியர்ஸ் (43), ரெய்னா (40) உள்ளனர்.
பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்னுக்கும் மேல் சேர்த்த மூன்றாவது துவக்க ஜோடி என ரோகித்-ரிக்கிள்டன் (116 ரன்) பெருமை பெற்றனர். முன்னதாக சச்சின்-ஸ்மித் (2012ல் 163), மைக்கேல் ஹசி-சிம்மன்ஸ் (2014ல் 120) முதல் இரு இடத்தில் உள்ளது.
பிரிமியர் அரங்கில் மும்பை அணிக்காக 6000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் ரோகித் சர்மா. ‘டி-20’ அரங்கில் ஒரு அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பெங்களூருவின் கோலி (8871 ரன்) முதலிடத்தில் உள்ளார்.
ஹாம்சயர் அணியின் ஜேம்ஸ் வின்ஸ் (5934), சென்னை அணியின் ரெய்னா (5528), தோனி (5269) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.