03.05.2025 – கோயம்புத்தூர்
உறவுகள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்!
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலகின் மிக மூத்த இனமெனத் திகழ்வது நமது தமிழ்த்தேசிய இனம். தமிழ்நாடு, தமிழீழம் என இரண்டு வரலாற்று வழிப்பட்ட தாயகங்களைக் கொண்ட முதுபெரும் இனக்கூட்டத்தினர் தமிழர்கள் நாம்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து, பண்டைய காலத்திலேயே மொழியியல் அறிவோடும், புலமையோடும் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் நாம். இவ்வுலகு நாகரிகமே அடைந்திடாத காலக்கட்டத்தில், அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்திடாத அக்காலப்பகுதியில் ஓடுகிற நீரைத் தடுத்துக் குறுக்கே கல்லணை எனும் அணை கட்டி, உலகினரை வியக்க வைத்த மரபைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் நாம்.
சொல்ல சொல்ல விரிவடைந்துகொண்டே செல்லுமளவுக்கு அளப்பெரும் பெருமைகளையும், எண்ணிலடங்காச் சிறப்புகளையும் கொண்ட தொல்குடியினர் தமிழர்கள் நாம்.
இவ்வாறு வரலாற்றுப்பெருமைகள் பலவற்றைக் கொண்டு உலகின் மிக மூத்த இனமாகவும், மற்ற இனக்கூட்டத்தினருக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் முன்னோடி சமூகமாகவும் விளங்கிய தமிழ்ப்பேரினம்.
பல்வேறு படையெடுப்புகளினாலும், உள்முரணால் விளைந்திட்டத் தன்னினப்பகைகளாலும், தொலைநோக்கற்றச் செயல்பாடுகளாலும், கூட்டுணர்வற்ற தன்மையினாலும் பிளந்து, பிரிந்து, வீழ்ந்தது. விளைவு, மன்னராட்சி, மக்களாட்சி என இரு மாறுபட்ட அரசதிகார முறைகளிலும், வேற்றினத்தாரிடமே பல ஆண்டுகளாகக் கீழ்ப்படிந்து நிற்கிறோம். அவர்களின் ஆளுகையின் கீழ் மொழி சிதைந்து, இனம் பிளந்து, மண் இழந்து, உரிமைகளைப் பறிகொடுத்து, அடிமை நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.~
2009ஆம் ஆண்டு ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து, 16 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும்கூட காற்றில் கரைந்த நம் இனச் சொந்தங்களின் மூச்சுக்காற்றை இன்னும் உணர முடிகிறது. தாய் நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட நம் தமிழீழச்சொந்தங்களின் உதிர வாடை இன்னும் நம் நினைவில் நின்று நம்மைப் போராடத்தூண்டுகிறது. இனவெறியால் நிகழ்த்தப்பட்ட நம்மினப்படுகொலையை ஒருநாளும் கடந்துபோக முடியாது.
நம்மினத்திற்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மறந்துவிட்டுச் செல்ல முடியாது. நம்மை நம்பியே, அந்நிலத்தில் மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். கடைசி நம்பிக்கையென நம்மையே திசைகாட்டிச் சென்றிருக்கிறார்கள். வீரத்தமிழினம் வீழ்ந்துவிடாது; மானத்தமிழினம் மாண்டுவிடாது எனக் காட்டுவதற்கு நாம் மீண்டெழ வேண்டும்; விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே என உலகுக்கு உரைக்க வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டதென சிங்கள இனவெறிக்கூட்டம் எக்காளமிட்டுச் சிரித்து முடிப்பதற்குள், நாம் இன்னொரு தாய் நிலத்திலே இன்னொரு வடிவிலே எழுந்து நிற்கிறோம்.
இறக்கப்பட்ட புலிக்கொடியை ஏந்தி நிற்கிறோம். ‘தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!’ என, உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்.
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா திடலில் நடைபெறவிருக்கிறது.
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!
மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 04 | 18-05-2025 மாலை 04 மணிக்கு
இடம்:
கொடிசியா திடல்
கோயம்புத்தூர்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி