04.05.2025 – பெங்களூரு
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை, கோலி இடம் பெற்ற பெங்களூரு அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு கோலி, ஜேக்கப் பெத்தெல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஜடேஜா பந்தில் பவுண்டரி அடித்த பெத்தெல், இத்தொடரில் முதல் அரைசதம் (28 பந்து) கடந்தார். பதிரானாவின் முதல் ஓவரில் பெத்தெல் (55) அவுட்டானார். கோலி 29 பந்தில் அரைசதம் கடந்தார். 33 பந்தில் 62 ரன் (ஸ்டிரைக் ரேட் 187.87) எடுத்த கோலி, சாம் கர்ரான் பந்தில் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் (17), ஜிதேஷ் சர்மா (7), கேப்டன் ரஜத் படிதர் (11) அவுட்டாக, பெங்களூரு அணி 17.4 ஓவரில் 157/5 ரன் என இருந்தது.
கடைசி 14 பந்து மீதம் உள்ள நிலையில் ரொமாரியோ ஷெப்பர்டு (வெ.இண்டீஸ்), டிம் டேவிட் இணைந்தனர். போட்டியின் 19 வது ஓவரை கலீல் வீசினார். இதில் மிரட்டிய ஷெப்பர்டு, 33 ரன் (6, 6, 4, 6, 6+1 (நோ பால்), 0, 4) சேர்த்தார். பதிரானா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் 1 ரன் எடுத்தார். அடுத்த 5 பந்தில் விளாசிய ஷெப்பர்டு (4, 0, 4, 6, 6), 14 பந்தில் அரைசதம் கடந்தார்.
கடைசி 16 பந்தில் 56 ரன் எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 213/5 ரன் குவித்தது. ஷெப்பர்டு (53 ரன், ஸ்டிரைக் ரேட் 378.57), டேவிட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் ஜோடி துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வீசிய 4வது ஓவரில் அசத்திய ஆயுஷ், 26 ரன் (4, 4, 4, 6, 4, 4) விளாசினார். ரஷீத் (14), கர்ரான் (4) நிலைக்கவில்லை. 25 பந்தில் 50 ரன் எடுத்த ஆயுஷ், பிரிமியர் தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார்.
ஜடேஜா 29 பந்தில் அரைசதம் அடித்தார். கைவசம் 8 விக்கெட் மீதம் உள்ள நிலையில், சென்னை அணி வெற்றிக்கு, கடைசி 24 பந்தில் 43 ரன் தேவைப்பட்டன. நிகிடி வீசிய 17 வது ஓவரின் 2வது பந்தில் ஆயுஷ் (94 ரன், 48 பந்து, ஸ்டிரைக் ரேட் 195.83) அவுட்டானார். அடுத்த பந்தில் பிரவிஸ் (0) அவுட்டானார்.
பின் தோனி, ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். சென்னை வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 15 ரன் தேவைப்பட்டன. யாஷ் தயாள் பந்து வீசினார். முதல் இரு பந்தில் 2 ரன் (1, 1) எடுக்கப்பட்டன. 3வது பந்தில் தோனி (12) அவுட்டானார். ‘நோ பாலாக’ வீசப்பட்ட 4வது பந்தில் துபே சிக்சர் அடித்தார்.
கடைசி 3 பந்தில் 6 ரன் மட்டும் தேவை என்பதால், வெற்றி பெற்றுவிடலாம் என சென்னை ரசிகர்கள் கனவு காணத் துவங்கினர். ஆனால் அடுத்த 3 பந்தை யாஷ் தயாள் துல்லியமாக வீசினார். இதில் 1, 1, 1, என 3 ரன் மட்டும் எடுக்கப்பட, ரசிகர்கள் நெஞ்சம் தகர்ந்தது. சென்னை அணி 20 ஓவரில் 211/5 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஜடேஜா (77), துபே (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி 9வது தோல்வியடைந்தது.
கடந்த 2023 பிரிமியர் தொடரில் கோல்கட்டா வெற்றிக்கு 6 பந்தில் 29 ரன் தேவைப்பட்டன. அப்போது குஜராத் அணியில் இருந்த யாஷ் தயாள் பந்து வீசினார். இதில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்சர் அடிக்க கோல்கட்டா வெற்றி பெற்றது.
நேற்று சென்னை வெற்றிக்கு 15 ரன் தேவை என்ற நிலையில், பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், யாஷ் தயாள் மீது நம்பிக்கை வைத்து பந்து வீச அழைத்தார். ‘நோ பால்’ உட்பட 12 ரன் மட்டும் கொடுத்து, இம்முறை பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்தார் யாஷ் தயாள்.
நிகிடி பந்தில் (17.3 ஓவர்) ‘எல்.பி.டபிள்யு.,’ ஆனார் பிரவிஸ். தீர்ப்பை எதிர்த்து 15 வினாடிக்குள் அப்பீல் செய்ய வேண்டும். ஆனால் பிரவீஸ், தாமதமாக ‘ரிவியூ’ கேட்க, அம்பயர் ஏற்க மறுத்தார். ஜடேஜா விவாதம் செய்த போதும், ஏற்கப்படவில்லை. ‘ரீப்ளேயில்’ பந்து ஸ்டம்சை விட்டு விலகிச் செல்வது போலத் தெரிந்தது. பிரவிஸ் சோகத்துடன் திரும்பினார்.
பிரிமியர் தொடரில் அதிகமுறை 500 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் வீரர் ஆனார் கோலி (8 முறை). இதுவரை 11 போட்டியில் 505 ரன் எடுத்துள்ளார். வார்னர் (7), ராகுல் (6), தவான் (5) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பெங்களூருவின் விராத் கோலி, தனது 53வது ரன்னை கடந்த போது, பிரிமியர் லீக் வரலாற்றில் 8500 ரன் குவித்த முதல் வீரரானார். இதுவரை 263 போட்டியில், 8 சதம், 62 அரைசதம் உட்பட 8509 ரன் எடுத்துள்ளார். அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா (6921 ரன், 267 போட்டி), ஷிகர் தவான் (6769 ரன், 222 போட்டி) உள்ளனர்.
பிரிமியர் தொடரில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் கோலி. இவர், சென்னைக்கு எதிராக இதுவரை 1,146 ரன் எடுத்துள்ளார். முன்னதாக வார்னர், பஞ்சாப் அணிக்கு எதிராக 1134 ரன் எடுத்துள்ளார்.
பெங்களூரு அணியின் ஜேக்கப் பெத்தெல், நேற்று 33 பந்தில் 55 ரன் எடுத்தார். இதையடுத்து பிரிமியர் அரங்கில் அரைசதம் அடித்த அன்னிய வீரர்களில், மூன்றாவது இளம் வீரர் ஆனார் பெத்தெல் (21 வயது, 292 நாள்).
நேற்று 62 ரன் எடுத்த கோலி, பெங்களூரு அணிக்காக நடப்பு தொடரில் தொடர்ந்து நான்காவது அரைசதம் (73, 70, 50, 62) விளாசினார். இதற்கு முன் 2016ல் இதுபோல ரன் மழை பொழிந்தார்.
சென்னை அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்களில் கோலி (10 முறை) முதலிடம் பிடித்தார். தலா 9 அரைசதம் அடித்த வார்னர், தவான், ரோகித் அடுத்து உள்ளனர்.
கோலி, பெத்தெல் இணைந்து நேற்று முதல் விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்தனர். சென்னைக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இது ஆனது. 2021ல் கோலி-படிக்கல் ஜோடி 111 ரன் எடுத்தது முதலிடத்தில் உள்ளது.
‘டி-20’ அரங்கில் எந்த ஒரு மைதானத்திலும் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் கெய்லை (151) முந்தி முதலிடம் பிடித்தார் கோலி (152). பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இருவரும் இந்த சாதனை நிகழ்த்தினர். தவிர வங்கதேசத்தின் மிர்புரில் கெய்ல் (138), இங்கிலாந்தின் நாட்டிங்காமில் அலெக்ஸ் ஹேல்ஸ் (135), மும்பை, வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா (122) அதிக சிக்சர் அடித்துள்ளனர்.
‘டி-20’ அரங்கில் ஒரு அணிக்காக 300 சிக்சர் அடித்த முதல் வீரர் ஆனார் கோலி. இதுவரை இவர் 301 சிக்சர் அடித்துள்ளார். பெங்களூருவின் கெய்ல் (263), மும்பையின் ரோகித் (262), போலார்டு (258), சென்னையின் தோனி (257) அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
பிரிமியர் அரங்கில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை ராகுல் (2018), கம்மின்ஸ் (2022) உடன் பகிர்ந்து கொண்டார் ஷெப்பர்டு. மூவரும் தலா 14 பந்தில் அரைசதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் (13 பந்து, 2023) முதலிடத்தில் உள்ளார்.
பிரிமியர் தொடரில் கடைசி இரு ஓவரில் (19-20) அதிக ரன் எடுத்த அணியானது பெங்களூரு. நேற்று சென்னைக்கு எதிராக 19 (33), 20 வது (21) ஓவரில் மொத்தம் 54/0 ரன் குவித்தது. முன்னதாக 2024ல் டில்லி அணி 53/0 ரன் (எதிர்-குஜராத்) எடுத்ததே அதிகம்.
‘டி-20’ அரங்கில் கடைசி இரண்டு ஓவரில் பேட்டிங் செய்து, அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார் ஷெப்பர்டு (52 ரன்). இதற்கு முன் 2023ல் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள வீரர் திபேந்திரா சிங் அய்ரீ, இதுபோல 52 ரன் எடுத்துள்ளார்.