08.05.2025 – சென்னை
அவரது அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு என்னும் ஊரில், ஆதிதிராவிடர் குடியிருப்பில் நள்ளிரவு நேரத்தில் ஆதிக்க ஜாதி வெறி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், ஆறு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வடகாடில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவில், ஆதிதிராவிடர்களை ஜாதி பெயரை சொல்லி, தேர் வடத்தை தொடவிடாமல் தடுத்து தாக்கியுள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையில் நடந்த அய்யனார் கோவில் தகராறு மற்றும் அது தொடர்பான வழக்கும் பின்னணி காரணம் என்பது தெரிய வருகிறது.
ஆதிதிராவிடர்களால் கட்டப்பட்டுள்ள அடைக்கலம் தந்த அய்யனார் கோவில் அருகே, 3 ஏக்கர் காலியிடத்தில் முத்தரையர் சமூகத்தினருக்கும் உரிமை உண்டு என, அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர்கள் நீதிமன்றத்தை நாடி, அக்கோவில் தங்களுக்கு மட்டும் உரியது என தீர்ப்பையும் பெற்றுள்ளனர். ஆனாலும், போலீஸ் துறையினர் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி, அக்கோவிலை பூட்டி வைத்துள்ளனர்.
இந்த பகை, ஏற்கனவே அந்த ஊரில் நிலவும் சூழலில் தான், தேரோட்ட திருவிழாவுக்கு சென்ற ஆதிதிராவிடர்களை வம்புக்கிழுத்து, வெறித்தனமாக தாக்கியுள்ளனர். எனவே, இது ஜாதி வெறி தாக்குதல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், போலீஸ் துறை புலனாய்வு துவங்குவதற்கு முன், ஒரு முன்முடிவை எடுத்து, தனி நபர்களுக்கு இடையிலான பிரச்னைகள் தான் காரணம் என கூறுவது, எந்த வகையில் சரியாக அமையும்; இது, வழக்கின் விசாரணையை பாதிக்காதா?
இது, வதந்தி பரப்புவதை தடுக்கும் முயற்சி என்பதை விட, நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் சதி என்றே கருத வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.