10.05.2025 – தமிழீழம்.
முள்ளிவாய்க்கால் துயரத்திலிருந்து…..
எறும்புகள் ஊர்வதுபோல்
இரவெல்லாம் நகர்ந்தோம்.
உடல்வற்றி உயிர்கொண்டு
கடலுக்குள் கரைந்தோம்.
வழியொன்றும் இல்லாமல்
விழிகரைந்து தொடர்ந்தோம்.
நெறியற்ற பகைவர் செயல்
குறிவைத்துத் துரத்த
இளைப்பாற இடமில்லை
இருந்தவுயிர் சொந்தமில்லை.
உலகத்திசையெங்கும் நடுங்க
மூச்சடக்கி நாம் நடந்தோம்.
பெற்றவளோ செத்துக்கிடக்க
பிள்ளைகளோ பாலுக்கு அழ
ஊழி அதை எண்ண எண்ண
இதயம் நடுங்கும்.
ஏவற்பேய்களிடம் இரக்கமில்லை.
இழப்பதற்கும் எங்களிடம் எதுவுமில்லை.
தவறான வழிநாங்கள் பார்க்கவில்லை
தமிழீழம் தானெங்கள் உணர்வின் எல்லை.
வீரமுடன் விண்மீது அமர்ந்திருக்கும்
விடுதலைப் பேரொளிகள் நினைவுடனே
விழித்திருந்து விடுதலைப்பண் பாடுதற்கு
காத்துள்ளோம் காலமொன்று
கனிந்தே தீரும். தமிழர்
கனவெல்லாம் நனவாக்கி நம்
நாடு மீட்போம்.
– சிவசக்தி.