11.05.2025 – தமிழீழம்.
– காத்திருக்கும் பொழுது –
ஒவ்வொரு பொழுதும்
உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது
முள்ளிவாய்க்காலின் பெருநினைவு.
ஆழ்ந்த உறக்கத்திலும் வந்து
செவிகளில் அறைகிறது
எறிகணைகளின் ஒலி.
கடற்கரையில் நடக்கையில்
கண்ணுக்குள் வருகின்றது
கடந்துவந்த உடலங்களின் காட்சி.
வானம் சுமந்துதிரியும்
கரியமேகத் திரள்களைப்போல
என் கண்ணீர்த்துளிகளை நானும்
காவித்திரிகிறேன்.
சிலவேளைகளில் கீச்சிடும்
குருவிகளின் குரல்
அச்சமூட்டுகிறது…
உடைந்த மரங்களின் கிளைகளாய்
உக்கிக்கிடக்கின்றன உணர்வுகள்.
முகம் திருப்பிச்செல்லும்
மனிதர்களின் நடுவே நான்
யாரோடு பேசமுடியும்?
நிறங்களும் முகங்களும்
வௌ;வேறாகித் திரியும்
மனிதர்களைவிட்டு விலகிச்செல்கிறேன்.
காலைமலர்களையும்
காற்றின் வீசுதலையும்
கடலின் மூசுதலையும்
என்னுள் சேகரித்துக்கொள்கிறேன்.
இவைகளிடம்தான் நான்
இழந்துபோன மனிதர்களின்
உயிரின் ஓசையை உணர்கிறேன்.
முள்ளிவாய்க்காலில் மீண்டும் என்
உறவுகள் உயிர்க்கும்வரை
காத்திருப்பேன்.