12.05.2025 – கொழும்பு
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறுகிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்குக் கொண்டு வர, 10ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதற்கிடையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான முடிவு இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் உரையாடலை ஆதரிப்பதாகவும், நமது சொந்த காலத்தில் பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.