13.05.2025 – ராய்ப்பூர்
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பனா பன்சாரி என்ற கிராமத்தில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், சரக்கு லாரியில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.
ராய்ப்பூரில் உள்ள ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில், சரகான் என்ற பகுதி அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, எதிர் திசையில் வந்த டிரெய்லர் வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில், நான்கு குழந்தைகள், ஒன்பது பெண்கள் என, மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஷ்ணு தியோ சாய், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.