14.05.2025 – முள்ளிவாய்க்கால்.

வீரவேங்கை கரிகாலன்
திருநாவுக்கரசு ஞானகணேசன்
14.04.1987 – 14.05.2009
முள்ளிவாய்க்கால்
யாழ். மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வீரவேங்கை கரிகாலன். திரு. திருமதி திருநாவுக்கரசு இணையரின் மகனாக ஞானகணேசன் என்னும் இயற்பெயருடன் 14.04.1987 அன்று பிறந்தார். யாழ். பரியோவான் கல்லூரியில் கல்விகற்றார்.
2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் அரசியல் பணிகள் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேளையில் அவர்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டு போராளியாக 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வன்னிக்கு வந்து சேர்ந்தார். கரிகாலன் என்னும் பெயருடன் அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டார்.
பயிற்சிமுகாமில் இவரது திறமைகள் இனங்காணப்பட்டு அறிவியல். படைத்துறைசார்ந்த கற்றல் செயற்பாடுகளுக்காகப் படையறிவியற் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கே தன் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி ஆளுமை மிக்கவராக வெளியேறினார்.
நிதித்துறையில் பணிகளைச் செய்துவந்த வேளையில் சமாதான ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு வன்னிக் களமுனைகள் திறக்கப்பட்டு சிறிலங்கா இராணுவம் உலக வல்லரசுகளின் துணையோடு பெருமெடுப்பில் தமிழர் பகுதிகளை நோக்கி மும்முனைத் தாக்குதல்களோடு முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
அதனை எதிர்த்து களமாடிய போராளிகளோடு 2008 யூன் மாதம் இரணைமடுப் பகுதியில் களமாடி நின்றார். தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல்களில் பங்குகொண்ட படையணியுடன் இணைந்து நகர்ந்து வந்தார். இறுதிச் சமர்க்களமான முள்ளிவாய்கால்வரை வீரத்துடனும் துணிவோடும் களமாடிய இந்த வீரன் வீரவேங்கை கரிகாலனாக 14 மே 2009 அன்று வீரகாவியமானார்.