15.05.2025 – தமிழீழம்

வீரவணக்கம்
வீரவேங்கை
நிறையிசை
பிரியதர்சினி விஜயராசா
யாழ். மாவட்டம்
வீரப்பிறப்பு: 23.03.1987
வீரச்சாவு: 15.05.2009
முள்ளிவாய்க்கால் சமரின் போது 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
வீரவேங்கை நிறையிசை
வீரவேங்கை நிறையிசை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இந்துக் கல்லூரியில் தனது கல்வியைக் கற்றார். தனது கல்வியை சிறப்புற முன்னெடுத்தார்.
2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறையினர் அரசியல் பணியினை யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்திருந்த வேளையில் கல்வி செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த இவர் அரசியற் கூட்டங்களிற் பங்கு கொண்டார்.
இதனூடாக விடுதலைப் போராட்டம் சார்ந்த தெளிவினை ஆழமாகப் புரிந்து கொண்டார். இதன் மூலம் 2004 ஆம் ஆண்டு இவ் அமைப்பில் அரசியல் துறையினர் ஊடாகப் போராளியாக தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் பின் வன்னியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து நிறையிசை எனும் பெயருடன் வரிப்புலியாகி மாலதி படையணியில் இணைக்கப்பட்டார். தொடர்ந்தும் இவர் கல்வ, அறிவியல், படைத்துறை சார்ந்து சிறந்த ஆற்றல் உள்ளவராக இனங்காணப்பட்டு படையறிவியற் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு படை அறிவியல் சார்ந்து சிறப்பாகக் கற்றதோடு தனது ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி நின்றார்.
இக்காலப்பகுதியில் வன்னிக் கள முனைகள் திறக்கப்பட்டு சிறிலங்கா இராணுவம் தமிழர் நிலங்களைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது. முன்னேறி வந்த இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டு படையணியுடன் நகர்ந்து வந்தார்.
அங்கிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிங்கள இராணுவத்திற்கு எதிராக வீரமுடன் களமாடி 15 மே 2009 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரவேங்கை நிறையிசை தமிழீழ மண்ணில் வித்தானார்.
வீரவேங்கைகளின் வீரத்தடங்களோடு…
“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த எம் மாவீரர்கள் மகத்தானவர்கள்.
எம் மாவீரர்களின் அற்புதமான தியாகங்கள், அவர்களின் உயரிய அர்ப்பணிப்புகள், அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றையும் கொண்ட ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது விடுதலைப்போராட்ட வரலாறு இன்றும் வழிகாட்டிநிற்கின்றது.
மாவீரரது வரலாற்றைப் பதியம் செய்து, அடுத்த தலைமுறைகளுக்குச் சரியான முறையில் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இவ் ஆவணத்தை ஆண்டுதோறும் நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர்நாளில் வெளியிட்டுவைப்பதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டமானது அளப்பரிய தியாகங்களைப் புரிந்து, பல்லாயிரம் மாவீரர்களை விதையாக விதைத்து இன்றும் அதே இலட்சியப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்த இலட்சியப்பயணத்தில் வீரச்சாவடைந்தவர்களுக்கு தரநிலை வழங்கியதனூடாக எமது இராணுவ வளர்ச்சியையும் விடுதலைப்போராட்ட பரிணாமத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உலகறியச்செய்தது.
சங்கர் சத்தியநாதன் என்ற போராளி, எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரராக அடையாளப்படுத்தபடும்போது, லெப்டினன்ட் சங்கர் என்று சர்வதேச இராணுவ தகுதிநிலை/தரநிலை வழங்கப்பெற்று எமது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பெற்றார்.
1982 நவம்பர் தொடக்கம் 2009 மே வரையிலான போராட்ட காலப்பகுதியில், அதன் இராணுவப் பரிணாம வளர்ச்சிக்குத் தக்கதாக சர்வதேச இராணுவத் தரநிலையில் பிரிகேடியர் என்னும் உயர்நிலையினை எமது விடுதலை இயக்கம் வழங்கியிருந்தது.
2009 ஆம் ஆண்டு நெருக்கடியான போர்ச்சூழலில் இறுதிவரை உறுதியோடு நின்று போராடி வீரச்சாவடைந்த பல நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் தளபதிகள் உரிய முறையில் அடையாளப்படுத்தப்படாமல், உரிமை கோரப்படாமல் மதிப்பளிக்க முடியாத களச்சூழ்நிலையில் இன்று, தகுந்த ஆதாரங்களோடு உறுதி செய்யப்பட்ட மாவீரர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அனுமதியுடன் வெளிப்படுத்தி, அனைத்து நாடுகளிலும் வீரவணக்க நிகழ்வினை நடாத்தி அவர்களுக்கான வணக்கத்தைச் செலுத்திவருகின்றோம்.
இம்மாவீரர்களை எமது அமைப்பின் மரபுரீதியாக வீரவேங்கை என்றே தொடர்ந்தும் அடையாளப்படுத்தியுள்ளோம். ஆனால், இது மாவீரர்களின் இராணுவத் தரநிலையினைக் குறிப்பதாக அடையாளப்படுத்தி நிற்கவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அக, புறச் சூழ்நிலைகள் முற்றிலும் பாதகமாக அமைந்திருந்தபோதும் பல இயக்கங்கள் உருவாகியபோதும் அதனைச் சவாலாக ஏற்றுக் களமாடிய எமது இயக்கம், உலகின் வேறு விடுதலை இயக்கங்களையும் விட வேறுபட்டும் மேம்பட்டும் நிற்கும் தனித்துவமான வீரவரலாற்றை வீரவேங்கை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
வீரவேங்கை என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் வீரவணக்கம் என்று ஆரம்பிக்கும் மாவீரர் உறுதிப்பிரமாணப் பத்திரத்தில் ஒவ்வொரு மாவீரர் பெயருக்கும் முன்பாக வீரவேங்கை என்று சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டு. இராணுவத்தரநிலையுடன் பெயர் குறிப்பிடப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டதோடு வித்துடல் விதைக்கப்பட்டது.
இவ் வீரவேங்கை என்ற தனிச்சிறப்பு அடையாளம், வரலாறாக அவர்களின் கல்லறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளது தனித்துவ அடையாளமிக்கதும் அறம், வீரம், உயர் ஒழுக்கம், உயர் அர்ப்பணிப்பு, மண்பற்று, கொள்கைப்பற்று, தலைமைப்பற்று என அதி உன்னத குணாதிசயங்களையும் இந்த வீரவேங்கை தன்னகத்தே தாங்கிநின்று பெருமைகொள்கின்றது.
எனவே, இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற வரலாற்றுக்குரியவர்களுக்கு வீரவேங்கை என்பது வரலாற்றுரீதியான மறுக்கமுடியாத ஒன்று. ஆகவே, எமது அமைப்பின் தற்போதுள்ள சூழமைவில் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கு, இராணுவத்தரநிலை வழங்கமுடியாதுள்ளதனால் எமது அமைப்பின் மரபுரீதியான வீரவேங்கை தனித்துவத்தையே நாம் பின்பற்றியுள்ளோம்.