15.05.2025 – தமிழீழம்.
மதிப்பிற்குரிய பெரும் தளபதியுடனான நினைவுகளுடன் …

பிரிகேடியர் சொர்ணம்
ஜோசப் அன்ரனிதாஸ்
08.04.1964 – 15.05.2009
திருகோணமலை
சொர்ணம் அண்ணா ! இந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு
உலகம் போற்றும் எம் பெருந்தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன்பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றி கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதியனவர். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் பலரையும் கவர்ந்தன.
வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. எமது படையானி ஒரு மிகப் பெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அவர்களின் இழப்பு இடியாய் விழுந்தது.
விமானப் படையின் துரித வளர்ச்சியில் எ ந்தவொரு தொய்வுமில்லாமல் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தலைவரின் ஆலோசனைக்கிணங்க கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக் கூடிய ஒரு நபராக எமது தளபதி சொர்ணம் அவர்கள் வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுகிறார். எமது பணி காடு சார்ந்த இடங்களிலும் அவரின் அனுபவம் எமக்குக் கற்றுத்தந்தது
வான்புலிகள் காட்டில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக எமக்கும் கற்றுக் கொடுத்தார். அருகிலையே வைத்து நெருக்கடியான காலகட்டத்தை எப்படிக் கையாள்வது என்பதைச் செயல் வடிவாக்கிக் கற்றுத் தந்தார்.
பெருந் தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நாடாத்தக்கூடிய வல்லமை மிக்க அத் தளபதி வரும் நாட்களில் ஆகாய தரைச் சமர்களை ஒழுங்கமைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்து போராளிகளை வழிநடத்தி சீர்பட அதை எமது கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்
பாதுகாப்பு போராளிகளின் மனங்களைத் தொய்வடையாமல் பாதுகாத்துக் கொள்வது இப் பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றைச் செவ்வனக் கற்றுத் தந்தார்.
காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த சொர்ணம் அண்ணா எமது ஓடு தளத்திற்கான பாதையாக இரணமடுவிற்கு கிழக்காகவும் வட்டக்கச்சியிலிருந்து பழைய கண்டி வீதியையும் தேர்ந்தெடுத்தார் இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடு தளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு எற்ப்பட்டது, அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிடம் வழங்கினார். எங்கெல்லாம் தேசியத்தைலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55யின் குரல் முழங்கும் அதுதான் சொர்ணம் அண்ணாவின் தனித்திறன்
தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார்.
தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த சொர்ணம் அண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.
வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்காக பெரும் பணியில் இணைத்துவிட்டு அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையாவர். அப்பாவும் மகளுமாக ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காக பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய்நிலம் திகழ்கிறது இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது மகளிற்கும் எமது வீரவணக்கம்.
தம் குடும்பத்தை விடுத்து தலைவனையும் மண்ணையும் நேசித்த முள்ளிவாய்க்கால் வரை தமது இலட்சியப்பாதையில் மடிந்த வீரப்பெருந் தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி நாம் ஒற்றுமையுடன் உரிமைக்காய் குரல் கொடுப்போம்.