16.05.2025 – தமிழீழம்.
நிரம்பிவழியும் நினைவுகள்.
அகலமறுக்கும் ஆழநினைவுகளால்
நிரம்பிவழிகிறது நெஞ்சம்.
உலகம் கைகோர்த்து ஆடிய
நாடகத்தில் அலறிய உயிர்களின்
கதறலும் கண்ணீரும் காயவில்லை.
உடற்றுகள்கள் சிந்தியநிலம்
நினைவிலிருந்து நீங்காதிருக்கிறது.
தீயின் கங்குகளால் அழிக்கப்பட்ட எம்
தேசத்தின் காயங்கள் ஆறவில்லை.
உறக்கத்தில் கூட உலுப்பியெடுக்கும்
உறங்காத நினைவுகளின் நெரிசல்.
நிலமெங்கும் நனைத்த குருதியின்
நெடில் இன்னும் இருக்கிறது.
புதிதாக வருகின்ற புத்தரும் அதனைப்
பார்த்தே இருக்கின்றார் பாவிகளை.
பேராசையோடு பிதற்றுகிற
பேரினத்தின்பிறவிகளாய் எம்
இனமழிக்கத் துடிக்கின்றார்.
எண்ணற்ற சட்டங்களால்
இளையதலைமுறைக்கு பேரிடி.
முள்ளிவாய்க்காலின் நினைவுச்
சின்னங்களை அழித்தால் தமிழ்
மனமழிந்துபோகுமென்ற சிற்றறிவால்
செயலூக்கம் கொள்ளும் பெருந்தகைகள்.
இருக்கின்ற உயிர்களின் இடர்கள்
இனியாவது இல்லாதொழியட்டும்.
பத்தாண்டு கடந்தும் முள்ளிவாய்க்கால்
மௌனித்தே கிடக்கிறது.
இந்தவுலகம் இனியாவது
கண்களைத் திறக்குமா இல்லையின்னும்
கதவடைத்துத் தூங்குமா….
தட்டித் திறப்போம் அவர்களின்
தாளுடைந்து போகட்டும்.
தமிழினத்தின் தாய்நாடு விடியட்டும்.