17.05.2025 – தமிழீழம்.
முள்ளிவாய்க்காலோடு மூச்சிழந்து போவோமா.? – சிவசக்தி.
அழுது அழுது
அருமைப் பொழுதுகளை
முழுமையாய் இழப்போமா….
உழுத மண்ணே மீண்டும்
மிகப்பெரிய விளைச்சல் தரும்.
முள்ளிவாய்க்கால் துயரம்
கொடியதுதான்.
அள்ளியொரு புறத்தே
எறிந்துவிட்டு ஆறமுடியாது.
துள்ளிநின்ற செல்வங்களைத்
தொலைத்துவிட்டு பாய்விரித்து
தூங்கியெழ முடியாது.
பசிவயிறு கொதிப்பதுபோல்
பிள்ளைகளைப் பிரிந்த
பெருவயிறு எரிகிறது.
செந்நீரால் வளர்த்த பயிர்
சிதைந்தழிந்து போக
சோம்பிக் கிடந்தழுது
செயலிழந்து போவோமா…..
மெல்லத் தலைநிமிர்ந்து
அல்லல் போக்குதற்கு
அடுத்த நிலை கொள்வோம்.
கெடுதல் நினைக்காமல்
அடுத்த தலைமுறை இந்த
அவனியிலே வாழுதற்கு
முன்னின்று உழைப்போம்.
முடிந்தவரை முள்ளிவாய்க்கால்
துயரங்களில் இருந்து
புதிதாய்க் கற்றுக்கொள்வோம்.
கொடிய நோய்வந்து உலகை
கொடூரமாய் வதைக்கும்போதும்
குலையாத உறுதியோடு
கொள்கை வழிநடப்போம்.
– சிவசக்தி