17.05.2025 – தமிழீழம்.
சொல்லத்தவறிய நேசம்.
ஏன்ரா எனக்கும் வயசு போட்டுது. உனக்கொரு கலியாணம் பண்ணி வச்சிட்டால் நானும் நிம்மதியாய் கண்ண மூடிருவன். உனக்கும் வயது போய்க்கொண்டிருக்கு என அம்மா பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டார்.
இனி கொஞ்ச நேரத்திற்கு நிறுத்த மாட்டா.. என்பதனை உணர்ந்து ரவிசங்கர் என்கிற ரவி சரியன அம்மா ….நான் கொஞ்சம் கடைப்பக்கம் பொயிட்டு வாறனன எனக் கூறியபடி தாயின் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்தான்.
கலியாணக் கதை எடுத்தாலே பொடிப்பயல் பிடிகுடுக்காமல் நழுவியிருவான். இன்னைக்கு வரட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டுரன் என தனக்குள் சொல்லிக்கொண்டு அன்றைய வழமையான வேலைகளை பார்க்கத் தொடங்கினாள் அம்மா பவளம்
எனது மன நிலையை பற்றி அம்மாவிடம் சொல்லவும் முடியாது அப்படியே சொன்னாலும் விளங்கிக் கொள்ள அம்மாவால் முடியுமா? எனது துளசியை எப்படி என்னால் மறக்க முடியும்? எனத் தனக்குத்தானே கூறியபடி நடந்து போய்க் கொண்டிருந்தவனின் நினைவுகள் கிட்டத்தட்ட 10,11 வருடங்கள் பின் நோக்கி நகர்ந்தது.
பொக்கணை சாலைப் பகுதி இங்குதான் விசேட வேவு பயிற்சிக்காக பல படையணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பல் ஆண்கள் பெண்கள் போராளிகள; வேவு பிரிவுத் தளபதி அனைவருடனும் கதைத்த பின்னர், எமக்கான பயிற்சிகள் உடனடியாக ஆரம்பமாகின, மிகவும் கடினமான பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, திசைக்காட்டி, GPS (Global positioning system) அதாவது பூமி நிலைப்படுத்தும் தொகுதி என அழைக்கப்படும், ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்தை அதனுடைய இருப்பிட புள்ளியை (fix) வைத்து நகர்ந்து செல்வது, நாங்கள் இருக்கின்ற இடத்தை எம்மவருக்கு துல்லியமாக தெரிவிப்பது, இப்படி எத்தனையோ நன்மைகள் நிறைந்த மிகவும் பயனுள்ள ஒரு கருவி தொடர்பான படிப்பு மற்றும் அதனை இயக்கும் பயிற்சி, வெடி மருந்து, கண்ணி வெடிகள், சூட்டுப் பயிற்சி இது போன்ற ஏராளமான பயிற்சிகள் என இடைவிடாது தொடர் பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
பயிற்சிகள் கிட்டத்தட்ட 03 மாதகாலமாக நடைபெற்றன இதில் எனது படையணியிலிருந்து நானும், கலந்து கொண்டேன், அதேபோல் மாலதி படையணியில் இருந்து துளசி எனும் போராளியும் கலந்து கொண்டார். அங்கு இருந்த பல போராளிகளில் மிகவும் அமைதியான சுபாவமுடையவள், யாருடனும் அதிகமாக கதைப்பதில்லை, ஆனால் பயிற்சி, பாடங்களில் முதல் நிலையில் இருந்தாள். அதனாலேயே பயிற்சி ஆசிரியர்கள் தொடங்கி, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்தமான போராளியாக குறுகிய நாட்களிலேயே மாறிப் போனாள் துளசி.
துளசி என்ற மூன்றெழுத்தில் அன்பு, பரிவு, பாசம், நேசம், அழகு, ஆளுமை, பற்று இப்படி ஏராளமான குணங்களும் சேர்ந்தே இணைந்திருந்தன, காலை 6 மணிக்கு ஓடு பாதையில் உடற்பயிற்சியில் ஆரம்பித்து வகுப்புகள், பயிற்சிகள், தேனீர் இடைவேளை பின் மீண்டும் பயிற்சிகள், பின் பகல் உணவு, பின் சிறு ஓய்வு, மீண்டும் பயிற்சிகள் மாலை 4:30 மணிக்கு தேநீருடன் கறிபண் கிடைக்கும் பின் குளிப்பு, விளையாட்டு, பின் இரவு 9:30 வரை தொடர்ந்து வகுப்புகள், பயிற்சிகள் இறுதியில் இரவு உணவு பின் உறக்கம் என ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பயிற்சி தொடங்கி 2மாதங்களுக்குப் பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நகர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் பெண்கள் என கலந்து அணிகள் பிரிக்கப்பட்டன. இதில் துளசியும் நானும் இன்னும் சில ஆண் போராளிகள், பெண் போராளிகள் என ஒரு அணியில் பிரிக்கப்பட்டோம்.
எமது நகர்வுக்கு தேவையான உலருணவு (பதப்படுத்தப்பட்ட உணவு) மற்றும் தண்ணீர் குளுசை (தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை) இன்னும் வரைபடம், திசைக்காட்டி, புPளு இன்னும் பல பொருட்கள் என ஒரு நகர்விற்கு தேவையான அத்தனை பொருட்களும் தயார்ப்படுத்தப்பட்டு நகர்வு ஆரம்பமாகியது.
நகர்வு ஆரம்பமாகி குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஒரு தடை. இயல்பாக நகர்வில் தடைகள் ஏற்ப்பட்டால் அதை எப்படி கடந்து செல்வது என பயிற்சி யில் கூறப்படும். அதன் படி தடைகளை கடந்து எமது நகர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் பல தடைகள் வந்ததனால் எதிர்ப்பார்த்த நேரத்தில் இலக்கை அடைய முடியவில்லை.
நிலைமையை பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டதும் பாதுகாப்பாக இரவு தங்கி பின் காலை நகர்வை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி எம்மிடமிருந்த தரப்பால் மூலம் கொட்டகை அமைத்து தங்கினோம். ஒருவர் மாறி ஒருவர் காவல் காத்து நித்திரை கொண்டோம்.
நள்ளிரவில் திடீரென ஒரு மெல்லிய முனகல் சத்தம்.எனக்கு உடனே விழிப்பு வந்து பார்க்கையில் துளசி காலகளைப் பிடித்தபடி வேதனை பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறு தயக்கம். துளசியுடன் ஒரு நாளும் கதைத்ததில்லை. ஆனாலும் அவளின் வேதனை என்னையும் தாக்கியது. எப்படியாவது அவளுக்கு உதவ வேணும் என எழுந்த ஆர்வத்தால் துணிவை வரவழைத்துக் கொண்டு அருகில் சென்று என்ன நடந்தது துளசி?என்று கேட்டு முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து கொட்டியது……
துளசியிடம் இருந்து பதில் இல்லை. சிறிய வெளிச்சத்தில் அவரது காலில் ஏதோ காயம் போல் தோன்ற எனது இதயத்துடிப்பின் வேகம் அதிகமானது….. நல்லவேளை இரவு என்பதால் எனது பதற்றத்தை துளசி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
திரும்பவும்” துளசி என்னண்டு சொல்லுங்கோ …..”என சிறிய கோபத்தோடு கேட்டதும் துளசி மிகவும் பயந்து போய் பா….. ம்…..பு…..என கூறுகையில் நடந்ததை ஒரு நொடியில் விளங்கிக் கொண்டேன்.
என் மார்புக்கூட்டின் வேகம் இரட்டிப்பானது.பாம்பு கடித்ததும் உடனே யாரையும் எழுப்ப வேண்டியது தானே இப்படி அலட்சியமாக இருந்திருக்கிறாளே என கோவம் ஒருபுறம்,தனது வலியையும் பொருட்படுத்தாமல் தனது காவல் நேரம் முடியட்டும் என்று கடமையை நிறைவேற்றினாள் துளசி. இது போராளிகளுக்கே உரிய கடமையுணர்வு.
இத்தனை எண்ணங்களும் என் மனதிற்குள்ளே தான்.வெளியில் எதுவுமே கூறவில்லை. மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் பாம்புக் கடித்ததற்கான முதலுதவியை மிக விரைவாக செய்தேன். தொடர்ந்து தொலைத் தொடர்பு கருவி மூலம் பொறுப்பாளருக்கு தகவல் கொடுத்தேன். உடனடியாக துளசியை முகாமிற்கு அழைத்து வரும்படி கூறப்பட்டது. நாங்கள் இருந்தது பயங்கர காட்டுப் பகுதி எங்கள் அணியினருடன் கலந்தாலோசிக்கையில் துளசியை நானே அழைத்து செல்வது என முடிவாகியது.
இத்தனையும் செய்து முடிக்கவும் துளசி தன் சுயநினைவை இழப்பதற்கும் சரியாக இருந்தது. எல்லாம் ஆயத்தமாகி எனது கிட் பேக்கை கொழுவிக்கொண்டு களமுனையில் காயமடைந்தவரை தூக்குவது போல் துளசியை தோளில் சுமந்து கொண்டு பிரதான வீதியை நோக்கி விரைந்தேன்.
என் மனம் என் வசம் இல்லை. துளசியை தூக்கிக்கொண்டு குறுக்குப் பாதையால் சென்று பிரதான வீதியை அடையவும் எம்மவர் வாகனத்துடன் வரவும் சரியாக இருந்தது.துளசியை சுமந்து கொண்டு வாகனம் வைத்தியசாலைநோக்கி சென்றது. வாகனத்தில் சென்றது துளசி மட்டுமல்ல.எனது மனமும் தான்.
பொதுவாக கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை.ஆனால் துளசிக்காக வாழ்க்கையில் முதல் முறையாக எல்லா கடவுள்களையும் மனதுருகி வேண்டினேன் துளசிக்காக.
“ஒருவர் எம்மோடு இருக்கும் போது புரியாத ஏதோ ஒன்று அவர் நம்மை விட்டு பிரியும் போது தோன்றும்.” அதுபோல் மனதில் ஏதோவொரு மாற்றம். ஒரு வித்தியாசமான உணர்வு என்னுள்ளே…..
துளசி போன்ற நல்ல போராளிகளின் உயிருக்கு ஆபத்து என்பதனால் என் மனம் இப்படி இருக்கிறது…..என எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டு தொடர்ந்து நான் செய்ய வேண்டியவற்றை செய்ய தொடங்கினேன்.
மறுநாள் அனைவரும் ஒன்று கூடி அவரவர்களுடைய நகர்வுகளை பற்றி விளங்கப்படுத்தினார்கள். எமது அணியின் முறை வந்த போதுசிறு அமைதி மட்டுமே.காரணம்எமது அணிதலைவி துளசி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால்.
அடுத்த நிலையில் இருக்கும் என்னை நகர்வு பற்றி விளங்கப்படுத்தும்படி கூறப்பட்டதும். ஒருவித தடுமாற்றத்துடன்ஆரம்பித்து கூறி முடிக்கும் போது எனது குரல் தேய்ந்து மிகவும் உணர்ச்சி பெருக்கோடு இருந்ததை என்னால் உணர முடிந்தது.
என்ன இது புது மாதிரியான உணர்வு.எனக்கு ஏன் இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது.இது கூடாதல்லவா என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.இல்லையில்லை சமாதானப்படுத்துவது போல்சமாளித்தேன் என்றே கூறலாம்.நாட்கள் செல்லச்செல்ல எனது நிலைமை மோசமாய்…… எந்நேரமும் துளசியின் நினைவே…… அமைதியான அவளது முகம், இறுதியில் பாம்பு கடித்ததும் உணர்விழந்து என்தோள்களில் அவள் கிடந்த கோலம்……என அத்தனையும் என் நினைவில் வந்து வந்து போனது. துளசியை பற்றிய தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்று மனம் துடிதுடித்து.ஆனால் யாரிடம் போய் என்னவென்று கேட்பது. அமைதியாய் என் மனம் ஒப்பாரி வைத்தது. எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதில் துளசியின் விம்பம்……
பலமுறை என்னை நானே கடிந்து கொண்ட போதும் முற்றுமுழுதாய் துளசியின் நினைவிலிருந்து வெளிவர முடியவில்லை.எப்படியாவது எனதிந்த மனநிலையை மாற்றியாக வேண்டும் என சற்று அதிகமாகவே வேலைகளை இழுத்து போட்டு செய்தேன். பசிக்கவில்லை,தூங்க முடியவில்லை, குறுகிய நாட்களிலேயே கொஞ்சம் உடல்மெலிந்து விட்டதாக உணர்ந்தேன்.
இப்படியாக சில நாட்களில் நாங்கள் வேறு ஓர் இடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டோம். புதிய இடம் ,புதிய சூழல் ,புது முறை பயிற்சிகள் என்பதாலும் எனது மிகப் பெரிய முயற்சியாலும் துளசியின் நினைவு இன்றி நான் எனது பணிகளை மேற்கொண்டேன்.
அதன் பிறகு துளசியை நான் பார்க்கவில்லை.பயிற்சிகள் நிறைவு பெற்று எமக்கான கடமைகளுக்காக பிரிக்கப்பட்டதும் .அவரவர் தமது கடமையிலேயே கண்ணாக இருந்தோம்.எந்தவித சிந்தனைகளுக்கும் இடங்கொடுக்காது எம் கடமைகளில் கவனமாக இருந்தோம்.
இறுதியில் முகமாலை,பளை, கிளிநொச்சியில் அக்கராயன், விசுவமடு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு இடமாக சமர்களத்தில் நின்றபோது ஒரு சில தடவைகள் துளசியை பார்த்திருக்கிறேன்.ஆனாலும் அவளும் சரி நானும் சரி எதுவும் கதைத்த தில்லை. பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டன.இப்படி ஏராளம் தடவைகள் சந்தித்தும்… எமக்குள் பார்வைகள் மட்டுமே……. ஆனாலும் ஒருவர் மீதான ஒருவர் நேசத்தை இருவருமே உணர்ந்திருந்தோம். அன்றைய சூழலில் எமது விருப்பங்கள் ஆசைகளை விட எம்தேசத்தின் மீதான பற்று மிகமிக அதிகமாக இருந்தது.எப்படியும்எம் தாய் மண்ணை சிங்கள இனவெறி பிடிச்சவனிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஈழத்தாகமே மனம் நிறைந்து இருந்தது.
இறுதியில் நந்திக்கடலில் மீண்டும் துளசியை சந்தித்தேன். ஆனால் கடந்த தடவைகள் போன்றல்லாது ஒரு வித்தியாசமான சூழலில், நான் எதிர்பார்க்காத நிலைமையில் துளசியை சந்திக்க வேண்டிய கட்டாயம்.எதிரியின் எறிகணை தாக்குதல்கள் ஒரு புறம், துப்பாக்கி ரவைகள் ஒருபுறம் ,இன்னும் கொத்துக்குண்டுகளாலும் மக்கள் போராளிகள் என கொத்து கொத்தாக செத்து விழுந்து கொண்டிருந்தனர்.காப்பரண்களோ, மூவிங் பங்கர்களோ, (தொடர்பதுங்குகுழி) மறைப்பு வேலிகளோ எதுவும் இன்றி கிடைத்தவைகளை காப்பு மறைப்புகளாக பயன்படுத்தி யுத்தம் நடைபெற்றது.
அப்பொழுது நானும் ஒரு சிறு வடலியோடு நிலையெடுத்து இருந்த சமயம் ……அண்ணா, அண்ணா என எனக்கு அருகில் ஒரு பெண் போராளியின் குரல் கேட்கவே, என்ன தங்கச்சி? என கேட்க ஒருக்கா அந்த (பற்றைகள் நிறைந்த இடத்தைக் காட்டி) வாங்கோண்ணா….. அவசரம் …..என கூறி என் பதிலுக்கு காத்திருக்காமல் ஓடிச் சென்று விட்டார்.
நானும் அந்தப் பெண் போராளியை பின்தொடர்ந்தேன். அப்போது அந்த சிறு பற்றை மறைவில், என்னவென்று சொல்வது? துளசி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
ஒரு கணம் என் சுவாசம் நின்று விட்டது. கண்ணிமைக்கும் நேரம். வேவு பயிற்சி நகர்வில் பாம்பு கடித்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது, அதன்பின் என் தவிப்பு, துடிப்பு அனைத்தும் அந்த நொடி வரை ஒன்றுவிடாமல் படமாக என் மனதில் வந்து போனது. செல் பட்டிருக்கிறது ஒரு கால் முழங்காலுடன் துண்டாகி இருந்தது. அதனைவிட உடலின் பல இடங்களில் காயம். அதில் மார்பினில் ஒரு ரவை துளைத்து இருந்தது. துளசியின் இதய துடிப்பை நிறுத்தி விட அந்த ரவை துடித்துக்கொண்டிருந்தது.
கண் முன்னால் துளசி மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை .அருகில் சென்று எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற தவிப்பில் அவளை தூக்க முற்படுகையில் என் கைகளை மெல்ல தடுத்து நிறுத்தினாள் துளசி.
அவளால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. இரத்தம் போயிருந்தது….. அதைவிட நெஞ்சுக் காயம் என்றபடியால் அவளால் பேச முடியவில்லை. சிரமப்பட்டு ஏதோ சொல்ல வந்தாள். ஆனால் அவளால் இயலவில்லை…. அவள் என்ன கூற வந்தாள் என்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பார்வை என்னையே உற்று நோக்கியது.
அந்த பார்வை எனக்கு ஒரு ஆயிரம் கதைகளை கூறி சென்றது. என்னைப்போல் எத்தனை மக்கள், மாவீரர்கள் இந்த மண்ணில் தமது உயிரை விட்டிருக்கிறார்கள். அவர்களது உயிர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அவர்கள் உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்? தனி ஈழம் என்பது இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் என் தலைவன் அணி நின்று மீட்டெடுப்பார். அதை நட்சத்திரங்கள் நடுவில் நின்று நானும் பார்த்து மகிழ்வேன் .உங்கள் துளசியாக இல்லாமல் மாவீரர் துளசி என்பது எனக்கு பெருமையே…. என் சுயத்தை வென்று விட்டேன். என் தாய் நாட்டிற்காக தாய் மண்ணிலே என்னுயிர் கலக்கின்றது. என்பதுபோல்…….. அவள் பார்வை மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.
துளசி, நான் உயிருக்கு உயிராய் நேசித்த துளசி, என் இதயக் காதலி, இல்லை இல்லை எம்ஈழக் காதலி கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிரை ஈழ விடியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டு இருந்தாள்.
ஒரு போராளியாக எனது துளசியை நினைத்து எனக்கும் பெருமையே! தனது உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் தான் உருகி உருகி நேசித்தவனை பற்றியோ தனது சுய வாழ்க்கை அவள் ஆசைகள் விருப்பங்களைப் பற்றி சிந்திக்காது தாய் நாட்டின் விடுதலையையே நினைத்து உயிர் விடுகிறாள். இப்படிப்பட்ட ஒரு வீரப் பெண்ணை நான் உளமார நேசித்தது எனக்கு பெருமையே.
என் மனம் கருங்கல் போன்று இறுகி இருந்தது. என் மொத்த பலமும் இழந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு ..ஆனாலும் நான் ஒரு போராளி. எனக்கான கடமை இருக்கிறதல்லவா…. எனது உயிரான துளசிக்கு அருகில் சென்று தரையில் அமர்ந்தேன். அவள் பார்வை இன்னும் என்னை விட்டு அகலவில்லை .அவள் தலையை மென்மையாக, அன்போடு, ஒரு ஆதரவாக தடவி விட்டேன். அடிபட்டு அழும் குழந்தையை அரவணைத்து தேற்றும் ஒரு தாய் போல்….
போகும் அவள் உயிர் வலியின்றி நிம்மதியாக போகட்டுமே… என்று எனது வலிகள் அத்தனையும் மறைத்து மெல்லமாக மிக மிக மென்மையாக தடவிக் கொடுத்தேன்.
அவள் பார்வையில் ஒரு தெளிவு ,ஒரு நிறைவு, ஒரு ஆறுதல், ஒரு அமைதி, ஒரு நிம்மதி (அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் ஒளிர்வது போல) எனது துளசியின் பார்வையும் பளிச்சென ஒரு தடவை மின்னியது. மீண்டும் அவள் பார்க்கவே இல்லை …….மண்ணோடு,என் மனதோடு விதையானாள்.
ம்…… ஒரு பெருமூச்சு விட்டு கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை யாரும் அறியாத வண்ணம் துடைத்துக் கொண்டே துளசியை நான் உண்மையாக உயிராக நேசித்ததை அவளிடம் கூறவில்லை அதைப்போல் அவளும் என்னை நேசித்தை என்னிடம் கூறியதில்லை. ஆனால் ஒருவர் மற்றவரை நேசித்தை இருவருமே உணர்ந்து கொண்டோம். எனது துளசியின் ஒவ்வொரு நினைவும் என் மனதோடு இருக்கிறது .அவளது நினைவுகளோடு நான் வாழப் பழகிக் கொண்டேன்.
இறுதி யுத்தம் எமது பின்னடைவாக இருக்கலாம் ஆனால் என்றோ ஒரு நாள் தலைவன் துணையுடன் தமிழீழம் அமைப்பது உறுதி.அதுவரை என் தாய் தமிழ் உறவுகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருப்பேன். அதற்கு என் உயிரான துளசியும் என்னுடன் துணையிருப்பாள் என்ற திடத்தோடு மீண்டும் தனது வீடு நோக்கி நடக்க தொடங்கினான் ரவி என்ற ரவிசங்கர்.
– அருந்தமிழ்.