18.05.2025 – முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்கால் : தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம்.
முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 15 ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது.
டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவாய்க்கால் பதிவுசெய்திருக்கிறது. அரசியல்வாழ்விற்காக வௌ;வேறு கட்சிகளில் இருக்கும் இனவாதிகள் அனைவருமே பௌத்தசிங்கள இனவெறியைத் தூண்டும் இனவாதிகள்தான் என்பது முள்ளிவாய்க்காலில் நிரூபணமாகியிருக்கிறது.
இலங்கைத் தீவு சிங்களஇனத்திற்கு மட்டுமே உரித்துடையது என்று போதிக்கும் மகாவம்சத்தின் பொய்மையை நம்பி, தமிழினத்தையே அழித்தொழிக்கத் துணிந்தது சிங்களப் பேரினவாதம். தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும், தமிழ்மக்கள் ஒருதேசிய இனமாக அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும், அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் மகாவம்சம் போதிக்கிறது. இந்தப்பேரினவாதத்தின் பண்பாடே உயிர்க்கொலையாகத்தான் காலங்காலமாக இருந்து வருகிறது.
தங்களுடைய நிலத்தில் தங்களுடைய வியர்வையில் தமிழர்கள் சிறந்தோங்கி வாழ்வதை விரும்பாத பேரினவாதத்தின் பெருவெறுப்புத்தான் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் பொருளாக இருக்கிறது.
தமிழர்களை அவர்தம் தாய்நிலத்தில் உரிமைகளோடு வாழவிடாத சிங்களப் பேரினவாதத்தின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிக்காட்டுவதாகவே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு உள்ளது. தமிழர்களின் கல்வியுரிமையை மறுத்தும், தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்தும், தமிழ்மொழியைச் சிதைத்தும் சிங்கள இனவாதம் தொடக்கிவைத்த அடக்குமுறைதான் ஆயுதப் போராட்டவடிவமாகத் தமிழ்மக்களிடம் வியாபித்தது.
தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டம் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட்டதே தவிர, சிங்களமக்களை இலக்கு வைக்கவில்லை.
இன்று சிங்களஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்களது மக்கள் கிளர்ந்தெழுந்து, போராட்டம் நடத்தி, குருதிசிந்தி, உயிர்விலை கொடுக்கும் இதே காலிமுகத்திடல் கடற்கரையில்தான் தமிழர்கள் 1956 இல் தம்வாழ்வுக்கான நீதிகேட்டு நின்றார்கள். அப்போதும் இதேபோன்றுதான் அறவழியில் போராடிய தமிழர்கள்மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. ஈவிரக்கமின்றி தமிழர்கள் தாக்கப்பட்டபோது, அதைத் தடுக்காமல் அப்போது ஆட்சியில் இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கண்களை மூடிக்கொண்டிருந்தார். அப்போதும் தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகினர். தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.
இதே வன்முறைகளை முள்ளிவாய்க்கால் வரை தமிழ்மக்கள் தொடர்ச்சியாக பட்டுவந்தார்கள். சிங்கள மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி தமிழர்களை அழிப்பதை நியாயப்படுத்தி வந்தது சிங்களப்பேரின ஆட்சிபீடம். தமிழ்மக்களின் போராட்டம் உச்சமடைந்த போதெல்லாம் அதை கூர்மழுங்கச் செய்வதற்காக அவ்வப்போது பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது பேரினவாதம். பேச்சுகளை நடத்தியபடியே தமிழ்மக்களை அழிப்பதற்கு ஆயுதங்களையும் குவித்துவந்தது.
தாய்நிலத்தின் விடுதலையை வேண்டி, தமிழினத்தலைவன் வழியில் உறுதியாக 30 ஆண்டுகளுக்கு மேல் போராடிய தமிழினத்தை அழிக்க சிங்களப்பேரினவாதம் எடுத்த பேருருத்தான் 2008இல் மாவிலாறில் தொடக்கப்பட்ட இன அழிப்புப்போர். இந்தப்போர் பல்வேறு உலகநாடுகளின் ஆசிகளுடனும், ஆயுதங்களுடனும்தான் நடத்தப்பட்டது என்பதை இவ்வுலகம் அறியும். ஆனாலும், தமிழர்களின் வீரமிக்க போராளிகள் இறுதிவரை கொள்கைகாத்துநின்றதையும் உலகறியும்.
உலகநாடுகள் சில வழங்கிய ஆயுதங்களால்தான் முள்ளிவாய்க்கால் வரை மகிந்த இராஐபக்ச அரசால் தமிழ்மக்கள் துரத்தித் துரத்தி அழிக்கப்பட்டார்கள். சர்வதேச போர்விதிகளுக்கு மாறாக தமிழ்மக்களை தாக்கியழிப்பதில் முப்படைகளும் முன்னின்றன. தடைசெய்யப்பட்ட குண்டுகளும், ஆயுதங்களும் அரசபடைகளால் பயன்படுத்தப்பட்டன. தமிழர்நிலமெங்கும் குருதிச்சேறானதை உயிருடன்வாழும் எந்தத் தமிழரும் இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்.
வாழ்வின் நம்பிக்கைக் கூறுகள் எல்லாம் சிதைந்து வெறும் கூடுகளாக உயிர்தப்பி வந்து வாழும் வலியென்பது மிகக் கொடியது. இந்தக் கொடியவலிகளை எமது இளந்தலைமுறையினர் அறிந்துகொண்டு, தம் தாய்நிலத்தை வாழவைக்கும் முயற்சிகளை இன்னுமின்னும் முடுக்கிக்கொள்ளவேண்டும்.
தமிழினத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக எல்லாம் இழந்து அவலங்கள் சுமந்து, இன்றும் கண்ணீருடன் நடைப்பிணங்களாக வாழும் மக்களின் மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. உயிரிழப்புகள், உறவுகளைப் பிரிந்தமை, அகதிகளானமை எனப் பல்வேறு துயரச்சுமைகளுடனேயே தமிழ்மக்கள் வாழ்கின்றனர்.
தமிழர்களை, தமிழினப் பெண்களை எப்படியெல்லாம் கொடூரமாக வதைத்தார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த இன அழிப்பை கண்டுகொள்ளாமல் இருக்கும்நாடுகள் இலங்கையரசைக் காப்பாற்றிவருகின்றன.
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடித்தேடி அலைந்துகொண்டிருக்கும் அவலம் இன்றும் தீர்ந்தபாடில்லை. 2009 இன் மேமாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பிரசித்தமான பேரருள்மிக்க கண்ணகை அம்மனின் திசைபார்த்து கையெடுத்து இறைஞ்சியவர்களின் கண்ணீர் இன்று வீண்போகவில்லை. வினை விளைந்து விளைச்சல் அதிகமாகியிருக்கிறது. அடுத்தவரின் கண்ணீரில் அகம்மகிழும் பண்பாடு கொண்டவர்களல்ல தமிழர்கள். அதையும்மீறி அவர்களின் மனதில் ஏதோவொரு எண்ணம் முகிழ்க்கிறது என்றால், அது தமிழ்மக்கள் பட்டுத்துடித்த பெருவலியின் விளைவாகவே இருக்கமுடியும்.
‘ தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும் ‘ எனத் தமிழர்களிடம் ஒரு பழமொழி உண்டு. இது இப்போது உண்மையை உணர்த்துகிறது. தமிழர்களின் கோரிக்கைகளை தவறென விமர்சித்தவர்களின் கண்கள் இப்போது திறக்கின்றன. தமிழர்கள் மீதான பரிவைக்கொண்டிருந்தும் ஆட்சியாளரிடம் அஞ்சிக்கிடந்தவர்கள் தம் மௌனம் கலைத்திருக்கிறார்கள். வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
எமது தேசியத்தலைவர் அவர்கள் சொன்னதுபோல, தமிழ்மக்களைப் பதம்பார்த்த வன்முறை இப்போது அவர்களையே பதம்பார்த்துக்கொண்டிருக்கிறது. கடன்பட்டுக் கடன்பட்டுத் தமிழ்மக்களின் தலைகளில் கொட்டிய குண்டுகளின் கணக்கு இப்போது எண்ணப்பட்டு வருகிறது.
எது எப்படியிருப்பினும் முள்ளிவாய்க்கால் நினைவு என்பது, தமிழர்களின் வாழ்வுமுழுவதும் மட்டுமல்ல, வரலாறுமுழுவதும் தொடரும். முள்ளிவாய்க்கால் நினைவுகளை கஞ்சியோடு நினைவுகூருகிறார்கள் தமிழர்கள். ஒருவாய்க் கஞ்சிக்காக வரிசையில்நின்று, படையினரின் குண்டுவீச்சில் இறந்துபொன குழந்தைகளின் நினைவுகள் கண்ணீருடன் முட்டிவழிகின்றன. பெற்றோரை இழந்த குழந்தைகளின் துயரமும், பிள்ளைகளை இழந்த பெற்றோரின் துயரமும் ஆற்றமுடியாதவையாக உள்ளன. முள்ளிவாய்க்கால் என்பது, தமிழர்களின் மூச்சடங்கிய நிலமல்ல. தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் இடமாகவே இருக்கும். நந்திக்கடலின் அலைகளில் மூச்சுக்காற்றாய் வாழும் உயிரிழந்த தமிழர்களின் கனவுகள் மெய்ப்படும்.
– சிவசக்தி.