18.05.2025 – முள்ளிவாய்க்கால்.
இந்தநாளைக் கஞ்சிநாளாய்க் கடைப்பிடிப்போம்.
கஞ்சிக்கும் வழியற்று நாங்கள்
காய்ந்துகிடந்ததை நினைவோம்.
பெற்றதாய் வற்றியுலர்ந்துபோக
ஏற்றதாய் எதுவுமின்றி எம்செல்வங்கள்
கிண்ணங்கள் கையிலேந்தி
அலைந்திருந்த நாட்கள் அவை.
ஒட்டி உலர்ந்து உயிர் வலிந்து
அலைந்தநாட்களின் நினைவுகள்.
உப்பும் இன்றி ஒருதுளி நீருமின்றி
தவித்த நாட்களின் வடுக்கள் அவை.
கால்கள் வலிக்க காத்துக்கிடந்து
கண்ணீர் சுமந்தநாட்கள் அவை.
நினைக்க நினைக்க நெருப்புஎரியும்
நீங்காத வலிகள் தரும் அவை.
வரிசையில் நின்று வாடிவதங்கி
கஞ்சிப்பாiனையை நெருங்கியவேளை
குண்டடிபட்டுச் சிதறிய குஞ்சுகளை
நினைவில் நிறுத்துவோம்.
மனிதம்மரத்த மனித உலகம்
ஈழத்தமிழரை உணவின்றி வதைத்ததை
நாளை நம் பிள்ளைக்குச் சொல்வோம்.
கொத்துக்கொத்தாய் மடிந்தவர்நினைவை
மறந்திடாது மனதிற்கொள்வோம்.
குருதியில் நனைந்த அரிசிப்பருக்கையை
கழுவிச் சமைத்த காலத்தை நினைப்போம்.
கடந்தகாலத்தை மறந்துவாழாது
கனவிலும் அதனைச் சுமப்போம்.
தமிழர்வாழும் இல்லங்கள்தோறும்
முள்ளிவாய்க்கால் நினைவுகள் பதிப்போம்.