22.05.2025 – புதுடில்லி.
தங்களுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய சேவை ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்தது தன்னிச்சையானது. இதனால், 14,000 இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த, ‘ஸெலெபி’ நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
பாகிஸ்தான் மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலை, மேற்காசிய நாடான துருக்கி கண்டித்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய நாட்டில் ஒன்பதுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணியர் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்த துருக்கியின், ‘ஸெலெபி’ நிறுவனத்திற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த அனுமதி இருந்தால் மட்டுமே, இந்திய நாட்டின் விமான நிலையங்களில் எந்தவொரு நிறுவனமும் சேவை வழங்க முடியும்.
இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில், ‘ஸெலெபி’ நிறுவனம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டதாவது:
ஸெலெபி நிறுவனம் இந்தியாவில், 17 ஆண்டுகளாக எந்த குறையும் இல்லாமல் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு அனுமதி ரத்து முடிவு தன்னிச்சையானது.
இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும் போது எங்கள் தரப்புக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்று விதி கூறுகிறது. ஆனால் அதை வழங்கவில்லை. ஸெலெபி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இந்திய நிறுவனம். அதன் ஊழியர்கள் இந்தியர்கள். மத்திய அரசின் நடவடிக்கையால் 14,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். துருக்கியைச் சேர்ந்தவர்கள் நிறுவனத்தில் இருப்பது பிரச்னை என்றால், அவர்களை நீக்கவும் தயார். – இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்திய மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்புவது, இதுபோன்ற வழக்குகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்’ என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.