22.05.2025 – மும்பை.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டில்லிக்கு எதிரான போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 வது முறையாக, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது மும்பை அணி.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 63வது லீக் போட்டி மும்பை, டில்லி அணிகளுக்கு இடையே நடந்தது. வான்கடே மைதனாத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற டில்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் ஷர்மா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். பவர் பிளேவின் கடைசி ஓவரில் வில் ஜேக்ஸூம் (21), 7வது ஓவரில் ரிக்கெல்டனும் (25) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். திலக் வர்மா 27 ரன்களில் அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் சூர்யகுமார் யாதவும், நமன் தீரும் ஜோடி சேர்ந்து சிக்சர் மழை பொழிந்தனர். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் 27 ரன்களும், சமீரா வீசிய 20வது ஓவரில் 21 ரன்களும் குவித்தனர். கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 48 ரன்கள் சேர்த்தது. 35 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், 73 ரன்களுடனும், நமன் தீர் 24 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
181 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய டில்லி அணியில் கே.எல். ராகுல் 11 ரன்களிலும், டூ பிளஸ்ஸி 6 ரன்களிலும், அபிஷேக் போரல் 3 ரன்களிலும் , விபிராஜ் நிஹாம் 20 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 39 ரன்களிலும் ,ஸ்டூபஸ் 2 ரன்களிலும் , சர்மா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களில் டில்லி அணி திணறியது.
பின்னர் வந்த வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் டில்லி அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் சான்ட்னர், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம், மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த 18 சீசன்களில், 11 முறை மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி 12 முறையும், பெங்களூரு அணி 10 முறையும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.