25.05.2025 – கொழும்பு.
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1 கோடியே 86 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஏழு இலங்கைப் பயணிகள் சுங்க அதிகாரிகளால் சனிக்கிழமை (24.05.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், அனுராதபுரம், கெக்கிராவ, கஹவத்தை மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் குவைத், துபாய் மற்றும் ஓமானில் இருந்து 03 விமானங்கள் மூலம் சனிக்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர்களின் பயணப்பொதிகளில் இருந்து “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” வகை சிகரெட்டுகள் 124,000 அடங்கிய 620 சிகரெட் கார்டூன்களை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்நிலையில், சுங்க அதிகாரிகள் இந்த ஏழு பயணிகளையும் கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.