26.05.2025 – பெங்களூரு.
மாநிலம் முழுதும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கி உள்ள நிலையில், ஒமைக்ரான் வகையை சேர்ந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று வேகமாக பரவுவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, என்.பி.1.8.1 என்ற வகை பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிராவில் இந்த மாதம் மட்டும் 207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு இங்கு நான்கு பேர் பலியாகிஉள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை, 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 84 வயதான முதியவர் நேற்று பலியானார். இவருக்கு நீரிழிவு நோய் உட்பட பல்வேறு இணை நோய்கள் இருந்தன.
கர்நாடக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது.
“தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மாநிலத்தில் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
கடந்த சில வாரங்களாக, பி.ஏ.2 மற்றும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்து வந்த சூழலில், தற்போது என்.பி.1.8.1 என்ற வகை வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒமைக்ரான் ஜே.என்.1 வகையின் வழிதோன்றலாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த வகை தொற்றால், ஒமைக்ரானைவிட ஆபத்து குறைவாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொண்டை வலி, சோர்வு, லேசான இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, தலைவலி, குமட்டல், பசியின்மை, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் இந்த வகை தொற்றின் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன. இது, பெரிய அளவில் இல்லாமல், ஐந்து நாட்களில் குணமாகும் அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.