27.05.2025 – லக்னோ.
இதன் மூலம், பெங்களூரு அணி குவாலிபையர்-1ல் விளையாட தகுதி பெற்றது.
உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், லக்னோ அணியும், பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் மாத்தீவ் ப்ரீட்ஸ்க் 12 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் எடுத்த நிலையில் துஷாரா பந்தில் போல்டாகி வெளியேறினார்.
மற்றொரு துவக்க வீரர் மிச்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். அவர் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்து 67 ரன்களில் அவுட் ஆனார். பூரன் 13 ரன்களில் அவுட் ஆனார்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 54 பந்துகளில் 100 ரன்களை எட்டி சதம் அடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அவர் 61 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் லக்னோ அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன் எடுத்தது.
228 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு, பில் சால்ட், கோஹ்லி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சால்ட் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானர், பட்டிதார் 14 ரன்னிலும், லிவிங்ஸ்டன் டக் அவுட்டாகி, அடுத்தடுத்த பந்தில் வீழ்ந்தனர். மறுபுறம் பொறுமை காத்த கோஹ்லி 30 பந்தில் 54 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த மயாங் அகர்வால், ஜிதேஷ் சர்மா ஜோடி, சிக்சர், பவுண்டரி என வாணவேடிக்கை காட்டியது.
கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியாமல், லக்னோ வீரர்கள் திணறினர். இதனுடன் பீல்டிங்கும் மோசமாக அமைய, ஜெட் வேகத்தில் ரன் எகிறியது. மயங்க் அகர்வால், 5 பவுண்டரியுடன் 23 பந்தில் 41 ரன் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். முடிவில் 18.4 ஓவரில், 230 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், குவாலிபையர் – 1ல் விளையாட பெங்களூரு அணி தகுதி பெற்றது. புள்ளிப்பட்டியலில், 2வது இடம் பிடித்த பெங்களூரு, முதலிடம் பிடித்த பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி, சண்டிகரில் நாளை (29ம் தேதி) நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு முன்னேறும்.
எலிமினேட்டர் போட்டியில், 3வது இடம் பிடித்த குஜராத் அணியும், 4வது இடம் பிடித்த மும்பை அணியும், வரும் 30ம் தேதி மோத உள்ளன. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி, தொடரை விட்டு வெளியேறும். வென்ற அணி, குவாலிபையர் – 1ல் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு முன்னேறும்.