30.05.2025 – சென்னை.
நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் சில இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 19, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும்.